என்டிடிவி ஊடகத்தின் 29.18% பங்குகளை வாங்குகிறது அதானி குழுமம்!

என்டிடிவி ஊடகத்தின் 29.18% பங்குகளை வாங்குகிறது அதானி குழுமம்!

இந்தியாவின் ஊடக உலகில் என்டிடிவி (நியூடெல்லி டெலிவிஷன்) நிறுவனம் முக்கிய இடம் வகிக்கிறது. என்டிடிவி 24x7, என்டிடிவி இந்தியா, என்டிடிவி ப்ராஃபிட் ஆகிய மூன்று தேசிய செய்தி சேனல்களை இந்நிறுவனம் நடத்திவருகிறது. என்டிடிவி இணையதள செய்திகளைக் கோடிக்கணக்கான வாசகர்கள் வாசிக்கின்றனர். மூத்த ஊடகவியலாளர் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் இருவரும் இணைந்து தொடங்கிய ஊடகம் இது.

இந்த ஊடகத்தின் 29.18 சதவீதப் பங்குகளை தங்கள் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனம் வாங்குவதாக அதானி குழுமம் தெரிவித்திருக்கிறது.

என்டிடிவி நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோரின் அனைத்துப் பங்குகளையும், ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் மூலம், ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான விஸ்வ பிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாங்கிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தின் பங்குகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை வாங்கிவிட்டால், மேற்கொண்டு வாங்கப்போகும் பங்குகள் குறித்த வெளிப்படையான அறிவிப்பை வெளியிடலாம் என செபியின் விதிமுறைகள் சொல்கின்றன. அதன்படி, என் டிடிவி நிறுவனத்தின் மேலும் 26 சதவீதப் பங்குகளை வாங்கப்போவதாகவும் அதானி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

விமான நிலையம், துறைமுகம், மின்சார உற்பத்தி மற்றும் பகிர்வு, நிலக்கரிச் சுரங்கம், எரிவாயு வர்த்தம் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் அதானி குழுமம், இனி ஊடக உலகிலும் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் எனக் கருதப்படுகிறது. சமீபத்தில் நடந்துமுடிந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் கலந்துகொண்டு 212 கோடி ரூபாய்க்கு 26 கிகாஹெர்ட்ஸில் 400 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in