`2 லட்சம் கொடுக்காவிட்டால் பெயரை சேர்த்துவிடுவேன்'- மிரட்டிய பெண் இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை

மிரட்டிய காவலர்கள் மெல்வின், தங்கராஜ்
மிரட்டிய காவலர்கள் மெல்வின், தங்கராஜ்

திருட்டு வழக்கில் நகைக்கடை பெயரை சேர்த்து விடுவோம் என கூறி கடை உரிமையாளரிடம் 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரோகிணி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல்துறை ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ARC காமாட்சி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் மேலாளராக பணியாற்றி வருபவர் சிவகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் மீது புகார் அளித்தார். அதில், "கடந்த 10-ம் தேதி காலை தங்கள் கடைக்கு வந்த இருவர் நாங்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள். திருட்டு வழக்கில் நேபாள பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சில நகைகள் உங்கள் கடையில் வாங்கியது. எனவே விசாரணைக்காக காவல் நிலையம் வரவேண்டும் எனக்கூறி செல்போன் எண்ணை பெற்றுச் சென்றனர். அன்று மாலையே என்னை தொடர்பு கொண்டு இரவு 8 மணிக்கு காவல் நிலையம் வரும்படி கூறினர்.

சொன்ன நேரத்திற்கு காவல் நிலையம் சென்ற போது அங்கு உதவி ஆணையர் இருப்பதால் அவர் சென்ற பிறகு அழைப்பதாக கூறியதுடன் என்னை காவல் நிலையம் அருகே ஒரு தெருவில் காத்திருக்கச் சொல்லிவிட்டு பின் சுமார் இரவு 10.30 மணிக்கு உதவி ஆணையர் சென்ற பிறகு முதல் தளத்தில் உள்ள குற்றப்பிரிவு ஆய்வாளர் அறைக்கு வரச் சொன்னார்கள்.

காவல் நிலையம் சென்ற பின்னர் அங்கிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் ரோகிணி, திருட்டு வழக்கில் நேபாள பெண்ணை கைது செய்துள்ளோம். அவரிடம் உங்களுடைய கடை நகை உள்ளதால் எஃப்ஐஆரில் உங்கள் கடை பெயரை சேர்க்காமல் இருக்க தங்களை கவனிக்க வேண்டும். தங்கள் கடைக்கு வந்த இரு காவலர்களை காண்பித்து அவர்கள் சொல்வது போல செய்தால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி கூறினார். பின்னர் காவலர்கள் இருவரும் ஆய்வாளருக்கு 1.5 லட்சமும், தங்கள் இருவருக்கும் சேர்த்து 50 ஆயிரம் என மொத்தம் 2 லட்சம் ரூபாய் கொடுத்தால், இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யும்போது உங்கள் கடை பெயரை சேர்க்கமாட்டோம் எனக்கூறி மிரட்டினர்.

மேலும் தங்கள் கடையில் யார் நகை வாங்கினாலும் தங்கள் நிறுவனத்தின் பெயர் பொறித்த நகையைத் தான் கொடுப்போம். இதில் தங்கள் மீது தவறு இல்லை. சம்மந்தப்பட்ட நபர் நகை வாங்கிய தேதியை கூறினால் அதற்கான ரசீதுகளைக் கூட எடுத்து சமர்ப்பிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தும் அதை பொருட்படுத்தாமல் தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் காவல் ஆய்வாளர் ரோகிணி உள்ளிட்ட 3 பேர் மிரட்டல் விடுத்தனர். இதில் சம்மந்தப்பட்ட இருவர் கடைக்கு வந்த சி.சி.டி.வி பதிவுகள் மற்றும் தொலைபேசியில் பேசிய ஆடியோ பதிவுகளுடன் உள்ளதால் சம்மந்தப்பட்ட நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தனியார் நகைக்கடை மேலாளர் சிவக்குமாரை மிரட்டிய காவலர் மெல்வின், தங்கராஜ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவி்ட்டார். இதனைத் தொடர்ந்து நகைக்கடை மேலாளரிடம் 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளர் ரோகிணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் ரோகினையை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜூவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in