`அதிகாரிகளின் அலட்சியத்தால் 80 டிஎம்சி நீர் கடலில் வீணாக கலந்திருக்கிறது'- அமைச்சரிடம் வேதனை தெரிவித்த விவசாயிகள்

வேளாண் துறை அமைச்சரிடம் மனு அளிக்கும் கோபிகணேசன்
வேளாண் துறை அமைச்சரிடம் மனு அளிக்கும் கோபிகணேசன்

கடந்த சில தினங்களாக மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் சுமார் 80 டி எம்சி அளவுக்கு வீணாக கடலுக்குக்கு சென்று கலந்துள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், இப்படி நீரை வீணாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் துறை அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு காவிரி டெல்டா பகுதிகளில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி தீவிரமாக நடந்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் யூரியா, டிஏபி போன்ற உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை சந்தித்து விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள முட்டம் கிராமத்தில் நேற்று இரவு காவேரி டெல்டா பாசனத்தாரர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் குரு.கோபிகணேசன் உள்ளிட்ட விவசாயிகள் சந்தித்து மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், `டெல்டா மாவட்ட பகுதிகளில் ஒரு ஏரி, குளம், குட்டை, நீர்நிலைகள் கூட நிரம்பாத நிலையில், விவசாயிகள் வயல்களில் உரம் போட தண்ணீர் கிடைக்காத நிலையிலும் கடந்த 10 தினங்களாக 80 டிஎம்சி தண்ணீர் அளவிற்கு கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டு கடலில் வீணாக கலந்திருக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் பெரிய வேதனையாக உள்ளது. சரியான திட்டமிடல் இல்லாமல் இப்படி நீரை வீணாக்கிய நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு இம்மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. பயிர் காப்பீடு செய்வதில் சென்ற ஆண்டில் கோட்டை விட்டதுபோல் இவ்வாண்டும் நிகழாதவாறு தமிழக முதல்வரிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சென்று பயிர் காப்பீடு செய்வதற்கும் மேலும் 15 தினங்கள் அவகாசமும் பெற்று தரவேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். சில தனியார் கடைகள் அதிக விலைக்காக உரத்தை பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பதால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். அப்படி உரத்தை பதுக்குகிறவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது..

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in