எந்தெந்த நிறுவனம், எவ்வளவு விலைக்கு மது கொள்முதல்: விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு

எந்தெந்த நிறுவனம், எவ்வளவு விலைக்கு மது கொள்முதல்: விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு

டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்கும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர், டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட செலவுகள் குறித்தும், மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன என்பன குறித்த விவரங்களை கேட்டு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2015-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.

மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம், ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம், மூன்றாம் நபரின் வர்த்தகம் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி, எந்தெந்த நிறுவனங்களிடம், எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை வழங்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து லோகநாதன், கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்பதற்கு காரணங்கள் உள்ளனவா என்பதை கண்டறிய, மதுபானங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக மது உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் நகல்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதையடுத்து, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத டாஸ்மாக் நிர்வாகத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டார். மேலும், எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன, மதுபான உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த நகல்களை சீல் வைக்கப்பட்ட கவரில் ஜனவரி 6-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in