சுகாதாரமற்ற சிக்கன், மட்டன் பறிமுதல்: சென்னை வீ.ஆர்.மாலில் 4 உணவகத்துக்கு அதிரடி தடை

சுகாதாரமற்ற சிக்கன், மட்டன் பறிமுதல்: சென்னை வீ.ஆர்.மாலில் 4 உணவகத்துக்கு அதிரடி தடை

சென்னை வீ.ஆர்.மால் புட்கோட்டில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி சுகாதாரமின்றி செயல்பட்ட 4 உணவகங்களுக்கு தடை விதித்தனர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் பிரபல வணிக வளாகமான வீ.ஆர்.மால் செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் அவர்களுக்கென மூன்றாவது தளம் முழுவதும் புட் கோர்ட் (உணவகங்கள்) இயங்கி வருகிறது. இங்குள்ள நம்மவீடு வசந்த பவன் உணவகத்தில், நேற்று கே.கே.நகரை சேர்ந்த பெண் ஒருவர் பூரி ஆர்டர் செய்தார். அப்போது பூரியில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சமையல் கூடங்களில் ஆய்வு செய்த போது பூரி மாவில் புழுக்கள் நெளிந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, இரண்டு நாட்கள் ஓட்டலை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சத்தீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், வீ.ஆர் மால் புட்கோட்டில் உள்ள உணவகங்களில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது கொலாஜ் பை டஸ்கானா என்ற உணவகத்தில் முறையாக பதப்படுத்தாமல், பராமரிப்பின்றி வைக்கப்பட்டு இருந்த சிக்கன், மட்டன், பன்றி ஆகிய அசைவ உணவை பறிமுதல் செய்து, அந்த உணவகத்தை நடத்த தற்காலிக தடை விதித்தனர். அதேபோல் அங்குள்ள மற்றொரு அசைவ உணவகத்தில், சோதனை மேற்கொண்டதில் உரிக்கப்பட்ட கோழிகள் உண்ணுவதற்கு ஏற்ற எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், அடுக்கடுக்காக வைக்கப்பட்டு இருந்த கோழி கறிகளை பறிமுதல் செய்தனர்.

அடுத்தடுத்து 4 உணவகத்தில் நடத்தப்பட்ட சோதனை முடிவில், உணவு பாதுகாப்பு துறையின் நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயல்பட்டு வந்த 4 உணவகத்திற்கு தற்காலிக தடை விதித்ததுடன், உணவகம், சமையல் கூடம் ஆகியவற்றை முறையாக பராமரித்து உணவகம் சார்பில் பதில் தாக்கல் செய்தவுடன், அதிகாரிகள் மறு ஆய்வு செய்த பின்னரே, மீண்டும் உணவகத்தை நடத்த வேண்டும் என எச்சரித்து சென்றனர்.

குழந்தைகளுடன் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மாலில் தரமில்லாத உணவு கொடுத்து ஏமாற்றிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in