
கர்நாடகாவில் குடிபோதையில் கழிவறையைச் சுத்தம் செய்யும் ஆசிட்டை குடிநீர் என குடித்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம்,சாமராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகா முள்ளுரு கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தராஜூ (40). மது குடிப்பதில் ஆர்வமுடையவர். இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்குத் தண்ணீர் தாகம் எடுத்துள்ளது.
அப்போது வீட்டிலில பாட்டிலில் இருந்ததை எடுத்துக் குடித்துள்ளார். ஆனால், அது கழிவறையைச் சுத்தம் செய்யும் ஆசிட் என்பதால், வயிற்று வலி எடுத்து கதறித்துடித்துள்ளார்.
அவர் அலறித் துடிப்பதைக் கண்ட குடும்பத்தினர் சித்தராஜூவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சித்தராஜூ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் குடிநீர் என ஆசிட் குடித்தவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.