முதலில் ஷேர் ஆட்டோ, அடுத்து பைக்; தப்பிச் சென்ற கைதி: சிசிடிவியை பார்த்து போலீஸ் அதிர்ச்சி

தப்பிச் செல்லும் கைதி
தப்பிச் செல்லும் கைதி

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட விசாரணைக் கைதி காவல்துறையிடம் இருந்து தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த 21 வயது இளம்பெண்ணை, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம், வேப்பங்குளத்தைச் சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் 24 வயதான பத்மேஸ்வரன் கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரைப் பிடிக்கும் போது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இச்சூழலில், சிகிச்சை அளிப்பதற்காக பத்மேஸ்வரன் நேற்று மாலை காவல்துறையினர் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் இருந்து அண்ணா நிலையம் அருகே உள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் எலும்பு முறிவு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, கழிவறைக்குச் செல்வதாகக் காவலர்களிடம் தெரிவித்துவிட்டு கைதி சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாக அவர் திரும்பவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரைத் தேட ஆரம்பித்தபோது, அவர்களை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அளித்த புகாரின் பேரில் தப்பி ஓடிய கைதியைப் பிடிப்பதற்காக, தல்லாகுளம் காவல்நிலைய உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பத்மேஸ்வரனின் வீட்டிலும், மதுரை மாவட்டம் கீரத்துரையில் பகுதியில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிலும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்தும், கைதி திட்டமிட்டு தப்பிச் சென்றாரா? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறி பத்மேஸ்வரன் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், கோரிப்பாளையம் வரை ஷேர் ஆட்டோவில் சென்ற பத்மேஸ்வரன், அங்கிருந்து நண்பர்களின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் செல்வதும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in