கருவூலப்பணம் 1.89 கோடியை கையாடல் செய்த கணக்கர்: ஒரு மாதமாக தேடும் போலீஸ்

முனியசாமி
முனியசாமி

முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் ரூ.1.89 கோடி ரூபாய்  கையாடல் செய்து விட்டு தலைமறைவாகியுள்ள கணக்கரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் முனியசாமி. இவர், முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராக பணியாற்றி வந்தார்.

ஓய்வூதியர் கணக்கிலிருந்த பணத்தை தனது நண்பர் ஒருவரின் ராமநாதபுரம் வங்கி கணக்கிற்கு ரகசிய குறியீட்டு எண் மூலம் பயன்படுத்தி ரூ.9.25 லட்சம், ரூ.20 லட்சம் என இரண்டு தவணைகளில் அனுப்பி கையாடல் செய்தார். கருவூல தணிக்கையின் போது முனியசாமி ரூ.29 லட்சம் கையாடல் செய்தது தெரிய வந்தது.

பணம் கையாடல் தொடர்பாக  கணக்கர் முனியசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரையிடம், முதுகுளத்தூர் சார்நிலை கருவூல உதவி அதிகாரி சையது சிராஜுதீன், புகார் அளித்தார். எஸ்.பி அறிவுறுத்தலின் பேரில் ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். 2016 பிப்.17-ம் தேதி முதல் 2022 நவ.1-ம் தேதி வரை முனியசாமி பணியாற்றிய காலக்கட்டத்தில் போலி பட்டியல் தயாரித்து ஒரு கோடியே 88 லட்சத்து 74 ஆயிரத்து 719 ரூபாய் அரசு பணத்தை, வங்கி கணக்கில் வரவு வைத்து கையாடல் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக முனியசாமி மீது நடவடிக்கை எடுத்து அரசு பணத்தை மீட்டு தருமாறு ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரையிடம் கருவூல அலுவலர் கணேசன் நேற்று புகார் அளித்தார். இதன்படி மோசடி உள்பட 2 பிரிவுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடந்த ஒரு மாதமாக தலைமறைவான முனியசாமியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in