புயலால் சரிந்த மரங்கள் உடனடி அகற்றம்: ஆய்வு செய்த சென்னை காவல் ஆணையர் தகவல்

புயலால் சரிந்த மரங்கள் உடனடி அகற்றம்: ஆய்வு செய்த  சென்னை காவல் ஆணையர் தகவல்

"புயலால் சென்னையில் 120 பெரிய மரங்கள் சரிந்துள்ள நிலையில், இதுவரை 94 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது" என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

மேன்டூஸ் புயல் இன்று இரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்த நிலையில் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுமார் 120 பெரிய மரங்கள் சரிந்ததுடன், பலத்த காற்றின் காரணமாக வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், 6 போக்குவரத்து சிக்னல்களும், பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் சேதமடைந்தது. இந்நிலையில் கீழ்ப்பாக்கம், ஓட்டேரி, கொண்டித்தோப்பு, புதுப்பேட்டை ஆகிய 4 காவலர் குடியிருப்புகளை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று மாலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "சென்னையில் 6 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் சேதமடைந்துள்ளது. அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டது. புயலால் சென்னையில் 120 பெரிய மரங்கள் சரிந்துள்ள நிலையில், இதுவரை 94 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள மரங்களையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம், சாலையில் நீர் தேக்கம் போன்ற எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. சென்னையில் புயல் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை.

சிபிசிஐடி அலுவலகத்தில் புயல் காரணமாக டவர் சரிந்து விழுந்தது. அதனால் எந்தவித பாதிப்போ, இடையூறும் ஏற்படவில்லை. புயல் காரணமாக மடிப்பாக்கத்தில் 2 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் சுவர் இடிந்து விழுந்து தாயும், குழந்தையும் மூளைச்சாவு அடைந்துள்ளனர். கடந்த முறை காவலர் குடியிருப்புகளில் மின் மீட்டர்களை உயர்த்தி வைக்க வேண்டும், கான்கிரீட் சாலைகளை அமைக்க வேண்டும், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து ஏற்கெனவே 2.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இனி முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம், கொண்டித்தோப்பு, புதுப்பேட்டை மற்றும் ஓட்டேரி காவலர் குடியிருப்புகளில் சீரமைப்புப் பணிகளை தொடங்க உள்ளோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in