'அது, இதுல வராது': மத்திய அமைச்சரின் பதிலால் டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி

'அது, இதுல வராது': மத்திய அமைச்சரின் பதிலால்  டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி

நாகை மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தடை செய்யப்பட்ட பிரிவில் வராது  என மத்திய அமைச்சர் அளித்துள்ள விளக்கம் டெல்டா விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக நாகை அருகே பனங்குடியில் அமைந்திருக்கும் சிபிசிஎல் நிறுவன வளாகத்திற்கு அருகே நிலங்களைக் கையகப்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.  இது டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. 

அதனால்  மேற்கொண்டு புதிதாக எண்ணெய், மீத்தேன்  கிணறுகளோ, எண்ணெய்  சுத்திகரிப்பு நிறுவனங்களோ வராது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் சுத்திகரிப்பு ஆலை தொடர்பான பணிகள் அண்மையில் மீண்டும் தொடர்ந்தன.

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், மாநிலங்களவையில் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் "சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதா? அப்படியென்றால் 2020-ம் ஆண்டு பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து தடை செய்யப்பட்ட இடத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்பதை மத்திய அரசு அறிந்துள்ளதா?  இத்திட்டத்தை திரும்ப பெற மத்திய அரசிடம் ஏதேனும் முடிவு உள்ளதா என்றும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி,  சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தடைசெய்யப்பட்ட பிரிவில் இல்லை என தெரிவித்திருக்கிறார்.

2020-ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை எனவும் அவரது பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள காவிரி டெல்டா விவசாயிகள்,  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் எந்த பயனும் இல்லையா?  எண்ணெய்  நிறுவனங்களுக்கு சாதகமான அம்சங்கள்தான்  அந்த சட்டத்தில் உள்ளதா?  என்று  கேள்வி எழுப்பியுள்ளனர். அப்படி இருக்கும் பட்சத்தில் அவற்றைத் தற்போதைய தமிழக அரசு உடனடியாக சரி செய்து காவிரி டெல்டாவை உண்மையான பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாக  அக்கறை எடுத்து பாதுகாக்க வேண்டும் என்று  கோரிக்கை எடுத்துள்ளனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in