
புத்தாண்டை முன்னிட்டு தரிசனத்திற்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்ற வேன் மரத்தில் மோதியது. இதில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.
ஈரோடு மாவட்டம், சென்னபட்டி, முரளி காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சம்பத்குமார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மூன்று வயதில் மகாஸ்ரீ என்ற மகள் இருந்தார். புத்தாண்டு தரிசனத்திற்காக குடும்பத்துடனும், உறவினர்களுடனும் சம்பத்குமார் மேல்மருவத்தூர் கோயிலுக்கு வேனில் சென்றார்.
வேனை சேலம் மாவட்டம், கொளத்தூரைச் சேர்ந்த கவுதம்(27) என்பவர் ஓட்டினார். முரளி பிரிவு என்னும் பகுதியில் வந்தபோது வேன், ஒட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த மரத்தில் மோதியது.
இதில் வேனில் இருந்த சிறுமி மகா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த பத்துக்கும் அதிகமானோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். கோயிலில் சாமி தரிசனத்திற்கு குடும்பத்துடன் சென்றபோது மூன்றுவயது சிறுமி சாலை விபத்தில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.