அப்பளம்போல் நொறுங்கிய கார்; மாமியார், மருமகள், பேத்தி பலி: திருமண நிகழ்ச்சியை முடித்து திரும்பியபோது சோகம்

அப்பளம்போல் நொறுங்கிய கார்; மாமியார், மருமகள், பேத்தி பலி: திருமண நிகழ்ச்சியை முடித்து திரும்பியபோது சோகம்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே நேற்று மாலை  நடந்த கோர விபத்தில்  சிறுமி உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். அவர்களின் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ரஹமத்துலா மனைவி ரஷீதா பேகம். இவா் தனது மருமகள் ஆசிபா பானு (35), பேத்தி சஸ்மிதா (10), பேரன் முகமது இஸ்மாயில் (14) ஆகியோருடன் உடுமலையில் நடைபெற்ற அவரது உறவினர் இல்ல  திருமண விழாவில் கலந்துகொண்டு விட்டு நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  அவர்கள்  பயணித்த  வாடகைக் காரை மடத்துக்குளம் பகுதியைச் சோ்ந்த முத்து (57) ஓட்டினார்.

நரசிங்காபுரம் அருகே காா் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று இவர்கள் வந்த காரின்மீது  நேருக்குநோ் பயங்கரமாக மோதியது. இதில் காரில் முன்பகுதி முழுவதும் அப்பளம்போல் நொறுங்கியது. இதில், காரில் பயணம் செய்த ரஷீதா பேகம், ஆசிபா பானு, சஸ்மிதா, ஓட்டுநா் முத்து ஆகியோா் அந்த  இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த உடுமலைப்பேட்டை போலீஸார் படுகாயமடைந்த முகமது இஸ்மாயிலை அங்கிருந்தவா்கள் உதவியுடன் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.  உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சரக்கு வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட கார் விபத்தில் நான்கு பேர் பலியாகியிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in