தலையில் ஏறி இறங்கிய அரசு பஸ் சக்கரம்: மகன் கண்முன்னே பறிபோன தாயின் உயிர்: வேலைக்கு சென்றபோது சோகம்

தலையில் ஏறி இறங்கிய அரசு பஸ் சக்கரம்: மகன் கண்முன்னே பறிபோன தாயின் உயிர்: வேலைக்கு சென்றபோது சோகம்

சென்னையில் மகனுடன் பைக்கில் சென்ற போது மாநகர பேருந்து மோதி மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஒட்டியம்பாக்கம், வீரபாண்டியன் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சுஜாஜினி(45). இவரது மகன் ரன்ஜிவ்(20). இருவரும் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஹவுஸ்கீப்பிங்காக பணியாற்றி வந்தனர். இன்று காலை இருவரும் வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். தாய் சுஜாஜினி மகனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.

அப்போது, ஒட்டியம்பாக்கம் மெயின் சாலை வழியாக அரசங்கழனியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே சைதாப்பேட்டையில் இருந்து காரணை நோக்கி செல்லும் மாநகரப் பேருந்து (தடம் எண் 51பி) திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வாகனத்தில் இருந்த மகன் இடது பக்கமும் தாய் வலது பக்கமும் கீழே விழுந்தனர். அப்போது தாய் சுஜாஜினி தலை மீது அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். மகன் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுஜாஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாடம்பாக்கம், ஜோதிநகரை சேர்ந்த மாநகர பேருந்து ஓட்டுநர் டேவிட் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in