கோகுல்ராஜ் ஆணவக் கொலையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: தீண்டாமை ஒழிப்பு முன்னணி

கோகுல்ராஜ் கொலை குற்றவாளிகள்
கோகுல்ராஜ் கொலை குற்றவாளிகள்

சேலம் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் யுவராஜ் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு இறுதிநாள் வரை சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு  உறுதி செய்யப்பட்டிருப்பதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. சாதி ஆதிக்கத்தின் வக்கிரத்தை, கெக்கலிப்பை இக்கொலையைத் தொடர்ந்த நிகழ்வுகள் வெளிப்படுத்தின. ஊடகங்களில், சமூக வலைதளங்களில் சாதி வெறிப் பிரச்சாரங்களை சட்டத்திற்கு சவால் விடும் வகையில்  கொலையாளிகள் மேற்கொண்டனர். மதுரை சிறப்பு நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட குற்றவாளிகள் 10 பேரும் தங்களது இறுதி நாட்கள்வரை சிறையில் கழிக்க வேண்டும் என்கிற வரலாற்று தீர்ப்பை வழங்கியது. இதனை எதிர்த்து குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

அதனை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள்  ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் விசாரித்து  தீர்ப்பை வழங்கினர். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது.  இந்த மகத்தான தீர்ப்பினைப் பெறுவதற்காக உழைத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் உள்ளிட்ட குழுவினருக்கும் கோகுல்ராஜ் குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இதயபூர்வமான பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறான தீர்ப்புகள் கிடைக்கப் பெற்று இருக்கிற பின்புலத்தில் தமிழ்நாடு அரசு சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை இயற்றிட வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in