'கருக்கலைப்பு உரிமைகள் ரத்து': அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அதிபர் பைடன் கண்டனம்; ட்ரம்ப் வரவேற்பு

'கருக்கலைப்பு உரிமைகள் ரத்து': அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அதிபர் பைடன் கண்டனம்; ட்ரம்ப் வரவேற்பு

50 ஆண்டுகளுக்கு முன்பு கருக்கலைபினை சட்டப்பூர்வமாக்கிய தீர்ப்பினை ரத்து செய்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.

1973-ம் ஆண்டு "ரோ மற்றும் வேட்" இடையிலான வழக்கில் கருக்கலைப்பு என்பது "பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை" என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதேபோல 1992-ம் ஆண்டில் ஒரு வழக்கிலும் '22 முதல் 24 வார கருவை' பெண்கள் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்ய உரிமை உள்ளது என அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் கருக்கலைப்பு உரிமைகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அமெரிக்க உச்சநீதிமன்றம் பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்துள்ளதால், இனி மாகாணங்கள் தனிப்பட்ட முறையில் கருக்கலைப்பு தொடர்பாக சட்டங்களை இயற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் கிட்டத்தட்ட 25 மாகாணங்கள் கருக்கலைப்புக்கு உடனடியாக தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, கருக்கலைப்புக்கு தடை விதித்த முதல் அமெரிக்க மாநிலமாக மிசோரி ஆனது.

அமெரிக்காவின் தெற்கில் உள்ள 13 மாநிலங்களில் ஏற்கனவே கருக்கலைப்பு தொடர்பான சட்டங்கள் உள்ளன, அவை உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருந்தன. இந்த சூழலில் நேற்று வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அம்மாநிலங்களில் தானாகவே இச்சட்டங்கள் நடைமுறைக்கு வருகிறது.

இந்த தீர்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் பல இடங்களில் பெண்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இது நீதிமன்றத்திற்கும் நாட்டிற்கும் ஒரு சோகமான நாள். இந்தத் தீர்ப்பு அமெரிக்காவை 150 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது, இந்த தீர்ப்புக்கு எதிராக அரசு போராடும்" என தெரிவித்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் இந்த தீர்ப்பை விமர்சனம் செய்தனர்.

அதே நேரத்தில் இந்த தீர்ப்பினை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார், " இது கடவுளால் வழங்கப்பட்ட தீர்ப்பு. இன்றைய தீர்ப்பு வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். கருக்கலைப்பை தடைசெய்ய சட்டம் இயற்றுவதாக தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தபடி அனைத்தையும் செய்ததால்தான் இந்த தீர்ப்பு சாத்தியமாகியுள்ளது" என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in