சிறுமிகளுக்கு போதை மருந்து கொடுத்து மடாதிபதி பாலியல் பலாத்காரம் செய்தார்: அதிர வைக்கும் குற்றப்பத்திரிக்கை

சிறுமிகளுக்கு போதை மருந்து கொடுத்து மடாதிபதி பாலியல் பலாத்காரம் செய்தார்: அதிர வைக்கும் குற்றப்பத்திரிக்கை

மடத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்குப் போதை மருந்து கொடுத்து மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக காவல் துறையின் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் பிரபலமான முருகமடம் உள்ளது. இதன் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு(64). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மடத்தில் இருந்த 10-ம் வகுப்பு பயிலும் இரண்டு சிறுமிகளை இவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட சிறுமிகள், மைசூரில் உள்ள அரசு சாரா நிறுவனத்தை அணுகியதை அடுத்து ஆக.26-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது மடாதிபதி, பல ஆண்டுகளாக தங்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சித்ரதுர்கா, மைசூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதன் பின் செப்டம்பர் மாதம் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்களை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சிவமூர்த்தி முருகா சரணரு சிறுமிகளுக்குப் போதை மருந்தை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அக்.27-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட காவல் துறையின் குற்றப்பத்திரிகையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. விடுதி காப்பாளர் ராஷ்மி மற்றும் மற்றொரு நபரையும் போலீஸார் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். இவர்களைத் தவிர கங்காதரய்யா என்பவர் மீதும், இன்னொரு சிறுவன் மீதும் ஆதாரங்களைத் தேடி வருவதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள குற்றப்பத்திரிகை குறித்த தகவல் கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in