
ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து இன்று முதல் ஆவின் நெய் விலையும் லிட்டருக்கு 50 ரூபாய் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. 5 லிட்டர் கொண்ட நெய் பாட்டில் 2,900 ரூபாயாக இருந்த நிலையில் அது தற்போது 350 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 3,250 ரூபாயாக விற்பனை செய்யப் படுகிறது.
ஒரு லிட்டர் நெய் 580 ரூபாயாக இருந்த நிலையில் அது 50 ருபாய் உயர்த்தப்பட்டு ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. 500 மி.லி அளவு கொண்ட நெய் டப்பா விலை 290 ரூபாயிலிருந்து 315 ரூபாயாக வும், 200 மி.லி கொண்ட நெய் டப்பா விலை 130 லிருந்து 145 ரூபாயாகவும், 100 மி.லி நெய் டப்பா விலை 70 லிருந்து 75 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலை உயர்வு இன்றே நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ஆவின் நெய் இன்றிலிருந்தே கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக, நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆவின் பொருள்களை உபயோகிக்கும் நுகர்வோர் இந்த கடுமையான விலை உயர்வு காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.