போராட்டத்தில் குதித்த வாடிக்கையாளர்கள்: திடீரென ஆடியோ வெளியிட்ட ஆருத்ரா இயக்குநர்

போராட்டத்தில் குதித்த வாடிக்கையாளர்கள்: திடீரென ஆடியோ வெளியிட்ட ஆருத்ரா இயக்குநர்

"ஆருத்ரா வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்று அதன் நிர்வாக இயக்குநர் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, உஷா, ஹரிஷ், செந்தில்குமார், ராஜசேகர், பட்டாபிராமன், மைக்கேல் ராஜ் ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி 3.41 கோடி பணம், 60 சவரன் நகைகள், 2 கார்களை பறிமுதல் செய்ததுடன் இயக்குநர் பாஸ்கர் மற்றும் மோகன்பாபு ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஆருத்ரா கோல்டு கம்பெனிக்கு சொந்தமான 81 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. தலைமறைவாக உள்ள இயக்குநர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் முக்கிய நிர்வாகி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனம் முன்பு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி தர வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் 1 லட்ச ரூபாய்க்கு 30 ஆயிரம் வட்டி தருவதாக பேருந்து உள்ளிட்ட பல இடங்களில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் விளம்பரம் செய்ததை நம்பி கடன் வாங்கி முதலீடு செய்தோம். அவர்களும் கூறியபடி மாதந்தோறும் வட்டியாக 30 ஆயிரம் மற்றும் 2 தங்க காசு கொடுத்தனர். சில தவணைகள் கழித்து ஆட்களை சேர்த்துவிட்டால் கமிஷனாக 5,000 ஆயிரம் தருவதாக கூறியதை நம்பி பலரை சேர்த்துவிட்டோம். கோடிக்கணக்கில் பணம் சேர்ந்த பிறகு ஆருத்ரா நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

இதற்கிடையே தலைமறைவாக உள்ள இயக்குநர் ராஜசேகர், வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த இரு வாரங்களாக காவல்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினரால் ஏகப்பட்ட பிரச்சினை

என்றும், வாடிக்கையாளர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்றும், மீண்டும் ஆருத்ரா பெரிய அளவில் வளர்ந்து சாதனை படைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஆருத்ரா வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஆருத்ரா சாம்ராஜ்யத்தை யாராலும் அழிக்க முடியாது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in