பஞ்சாப் தேர்தலில் ஆஆக முதல்வர் வேட்பாளர் யார்?

அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அர்விந்த் கேஜ்ரிவால் தகவல்
பஞ்சாப் தேர்தலில் ஆஆக முதல்வர் வேட்பாளர் யார்?
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

பஞ்சாபில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. மார்ச் 10-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில் அம்மாநிலத் தேர்தல் களம் சுறுசுறுப்படைந்திருக்கிறது. இந்தச் சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் முதல்வர் வேட்பாளர் யார் என அடுத்த வாரம் அறிவிக்கப்போவதாக அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு, மத அவமதிப்புச் செயல்கள், கும்பல் கொலைகள், பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் அவரது பாதுகாப்பில் மீறல் நடந்தது ஆகிய சம்பவங்களை முன்வைத்து சரண்ஜீத் சிங் சன்னியின் அரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.

சிரோமணி அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதலின் குடும்பத்தினரும் காங்கிரஸும் பல ஆண்டுகளாகப் பஞ்சாபில் கொள்ளையடித்துவந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பஞ்சாப் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அது குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும்” என்று சொல்லி பேட்டியை முடித்துக்கொண்டார். முதல்வர் முகமாக யார் முன்னிறுத்தப்படுவார் என்பது பற்றி அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

பஞ்சாபில் ஒரு மாதத்துக்கு முன்பே பிற கட்சிகள் முதல்வர் வேட்பாளர்கள் யார் என்பதை முடிவுசெய்துவிட்டன. ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக ஒரு சீக்கியர்தான் முன்னிறுத்தப்படுவார் என அரவிந்த் கேஜ்ரிவால் உறுதியாகக் கூறியிருந்தார். ஆனால், அந்த சீக்கிய முகம் யார் என்பதுதான் இதுவரை முடிவாகவில்லை. ஆம் ஆத்மி கட்சி எம்.பியான பகவந்த் மான், எதிர்க்கட்சித் தலைவர் ஹர்பால் சிங் சீமா போன்றோரின் பெயர்கள் அடிபடுகின்றன. எனினும், யாரையும் இப்போதைக்கு முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த கேஜ்ரிவால் தயங்குகிறார்.

கடந்த முறை பஞ்சாப் மாநிலத்தின் இந்து வாக்காளர்கள், ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரும் ஆதரவு தந்தனர். இந்த முறை சீக்கியரை முன்னிறுத்துவதாக அறிவித்திருப்பதால், ஆம் ஆத்மி கட்சி இந்துக்களின் வாக்குகளை இழக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில், பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in