ஆம் ஆத்மி போராட்டம்... பிரதமர் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு; 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த பாதுகாப்பு
ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த பாதுகாப்பு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைதை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதால், பிரதமர் இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இல்லம் (கோப்பு படம்)
பிரதமர் இல்லம் (கோப்பு படம்)

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை வரும் 28ம் தேதி வரை, அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க, டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 5 நாள்களாக டெல்லி அமைச்சர்கள், ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள், கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

இந்நிலையில், கேஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக, பிரதமர் இல்லம் அமைந்துள்ள பகுதியில் டெல்லி காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

இத்தகவலை காவல் துறை உயர் அதிகாரி உறுதிப்படுத்தினார். மேலும், தலைநகர் டெல்லி முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களின் உள்நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அடைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் (கோப்பு படம்)
டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் (கோப்பு படம்)

இது தொடர்பாக அந்நிர்வாகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாதுகாப்பு காரணங்களுக்காக லோக் கல்யாண் மார்க் மெட்ரோ நிலையம், படேல் சௌக் மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 3 மற்றும் மத்திய செயலக மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 5 ஆகியவற்றின் நுழைவு / வெளியேற்றம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in