‘எங்கள் வேட்பாளர்தான் குஜராத்தின் அடுத்த முதல்வர்!’

பஞ்சாப் பாணியில் முதல்வர் வேட்பாளர் தேர்வுக்கு மக்களை அழைக்கும் கேஜ்ரிவால்
‘எங்கள் வேட்பாளர்தான் குஜராத்தின் அடுத்த முதல்வர்!’

குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகக் களமிறங்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் தேர்தல் பாணியில் தங்கள் கட்சி முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்குமாறு அம்மாநில மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதற்கான பிரத்யேக செல்போன் எண்ணை அறிவித்திருக்கிறார் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.

2017-ல் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை பாஜகவை வென்று ஆட்சியைப் பிடிக்கப்போவதாகப் பிரச்சாரம் செய்துவருகிறது. அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அடிக்கடி குஜராத் சென்று பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கின்றனர். இலவச மின்சாரம், தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் என ஏராளமான வாக்குறுதிகளை அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், அகமதாபாதில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அர்விந்த் கேஜ்ரிவால், “மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட விரும்புகிறனர். ஒரு வருடத்துக்கு முன்னர், முதல்வரை பாஜகவினர் மார்றினர். முதலில் விஜய் ருபானி முதல்வரானார். பின்னர் ஏன் அவருக்குப் பதிலாக பூபேந்திர படேலை முதல்வராக்கினார்கள்? அப்படியென்றால் விஜய் ருபானியிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தமா? மக்களிடம் கேட்டு விஜய் ரூபானியை முதல்வராக்கவில்லை. டெல்லியிலிருந்தே அது முடிவுசெய்யப்பட்டது” என்றார்.

மேலும், “நாங்கள் அப்படிச் செய்யமாட்டோம். முதல்வராக யாரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று மக்களிடம் கேட்டே முடிவெடுக்கிறோம். பஞ்சாபில் நாங்கள் இப்படித்தான் செய்தோம். மக்கள் விருப்பத்தின்படியே பகவந்த் மானின் பெயரை அறிவித்தோம். ஆம் ஆத்மி கட்சிதான் குஜராத்தில் ஆட்சியமைக்கவிருக்கிறது. எங்கள் சார்பில் நிறுத்தப்படும் முதல்வர் வேட்பாளர்தான் குஜராத்தின் அடுத்த முதல்வர். எனவே, அடுத்த முதல்வர் யார் என முடிவுசெய்யுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

இதற்காக, ’உங்கள் முதல்வரைத் தேர்ந்தெடுங்கள்’ எனும் திட்டத்தை அறிவித்திருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், அதற்கான செல்போன் எண்ணையும் அறிவித்திருக்கிறார். இந்த எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ, வாட்ஸ்-அப் தகவல் அல்லது குரல் பதிவின் மூலமோ தங்கள் விருப்பத்துக்குரிய வேட்பாளரின் பெயரைத் தெரிவிக்கலாம் என அக்கட்சி அறிவித்திருக்கிறது. நவம்பர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை அந்த எண் செயல்பாட்டில் இருக்கும். முடிவுகள் நவம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்படும்.

பகவந்த் மான்
பகவந்த் மான்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரை அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிறுத்துவார் எனும் கேள்வி எழுந்தது. முதல்வர் வேட்பாளர் குறித்து பஞ்சாப் மக்கள் அலைபேசி மூலம் தங்கள் கருத்தைச் சொல்லலாம் என்று கூறி அதற்கான எண்ணையும் வெளியிட்டார் கேஜ்ரிவால். எனினும், முதல்வர் வேட்பாளராக ஒரு சீக்கியர்தான் முன்னிறுத்தப்படுவார் எனக் கேஜ்ரிவால் முன்பே தெரிவித்திருந்தார். குறிப்பாக, பகவந்த் மான் குறித்து அவ்வப்போது அவர் தெரிவித்த பாராட்டுரைகள் அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதற்குக் கட்டியம் கூறின. எதிர்பார்த்தது போலவே, பகவந்த் மான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரே அந்தத் தேர்தலில் வென்று பஞ்சாப் முதல்வரானார்.

ராகவ் சட்டா
ராகவ் சட்டா

குஜராத்திலும் இதே பாணியை ஆம் ஆத்மி கட்சி முன்னெடுக்கிறது. அதேசமயம், பஞ்சாப் தேர்தலுக்கு முன்னதாக பகவந்த் மானின் பெயர் அதிகம் பேசப்பட்டது போல், குஜராத் தேர்தலில் அக்கட்சி சார்பில் இளம் தலைவரான ராகவ் சட்டாவின் பெயர் அதிகம் அடிபடுகிறது. மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சட்டா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். எனினும், டெல்லி தேர்தலிலும் பஞ்சாப் தேர்தலிலும் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர் எனும் முறையில், குஜராத் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த கேஜ்ரிவால் விரும்புகிறார் என்கிறார்கள். பகவந்த் மானைப் போலவே இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார் ராகவ் சட்டா. அவர் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் அவருக்குப் பல்வேறு பொறுப்புகளை அளித்துவந்திருக்கிறார். எனவே, குஜராத்தின் முதல்வர் முகமாக ராகவ் சட்டா அறிவிக்கப்படக்கூடும். அதற்கு முன்னோட்டமாக பழைய உத்தியைப் பயன்படுத்துகிறது ஆம் ஆத்மி கட்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in