காஷ்மீரிலும் கால் பதிக்கும் ஆம் ஆத்மி!

காஷ்மீரிலும் கால் பதிக்கும் ஆம் ஆத்மி!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இமாசல பிரதேசம், குஜராத் எனத் தனது எல்லைகளை விரிவுபடுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. சமீபத்தில் இமாசல பிரதேச பாஜகவைச் சேர்ந்த மூன்று முக்கியத் தலைவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தது பரபரப்புச் செய்தியானது. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த இலக்கு காஷ்மீர்!

காஷ்மீரில் 2018 ஜூன் முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு 2019 ஆகஸ்ட் 5-ல் ரத்துசெய்யப்பட்டு காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர், காஷ்மீரில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் பெருமளவில் குறைந்திருக்கின்றன. காஷ்மீரில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் காஷ்மீரில் கால் பதிக்க முயற்சிக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

பாஜகவுக்கு எதிரான அரசியல் சக்தியாகத் தன்னை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பாஜகவைப் போலவே தேசியவாதத்தையும், வளர்ச்சித் திட்டங்களையும் தனது அரசியல் செயல்திட்டமாக முன்வைக்கிறது.

இமாசல பிரதேசத்தில் செய்ததுபோலவே காஷ்மீரிலும் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களைத் தங்கள் கட்சிக்கு இழுக்கும் வேலைகளில் ஆம் ஆத்மி கட்சியினர் இறங்கியிருக்கிறார்கள். அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பல்வந்த் சிங் மங்கோடியா நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியில் இணைந்த பல்வந்த் சிங், “காஷ்மீர் மக்கள் டெல்லி மாடலையும் கேஜ்ரிவால் மாடலையும் விரும்புகின்றனர். நான் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துச் சென்றிருந்தபோது, ‘கேஜ்ரிவால் என் ஹீரோ, ஏனெனில் என் மின்சாரக் கட்டணம் ஆகிவிட்டது ஜீரோ’ என்று ஒருவர் எழுதியிருந்ததைப் பார்த்தேன்” என்று கூறியிருக்கிறார்.

“இளைஞர் நலன், கல்வி, மருத்துவம், மின்சாரம், குடிநீர் போன்றவைதான் எங்கள் கட்சியின் முக்கிய செயல் திட்டங்கள். இவற்றால் மக்கள் கவரப்பட்டிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் வரும் நாட்களில் எங்கள் கட்சிக்கு ஆதரவு அதிகரிக்கும்; அது வாக்குகளாக மாறும்” என்று காஷ்மீர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் கஜூரியா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in