300 யுனிட் மின்சாரம் இலவசம்: முத்தாய்ப்பான திட்டத்தை அறிவித்த பஞ்சாப் அரசு!

300 யுனிட் மின்சாரம் இலவசம்: முத்தாய்ப்பான திட்டத்தை அறிவித்த பஞ்சாப் அரசு!

பஞ்சாபின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இனி 300 யுனிட் மின்சாரம் இலவசமாகக் கிடைக்கப்போகிறது. ஆம், ஜூலை 1-ம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலாகிறது என அம்மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 300 யுனிட் மின்சாரம் இலவசம் என சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது அதை நிறைவேற்றுகிறது.

பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றதும், முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் முடிவாக 25,000 பேருக்கு மாநில அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பை அறிவித்தார் பகவந்த் மான். அதில் 10,000 வேலைவாய்ப்புகள் காவல் துறையில் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அவரது அரசு.

முன்னதாக, “எங்கள் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலுடன் அற்புதமான சந்திப்பு நிகழ்ந்தது. வெகு விரைவில் பஞ்சாப் மக்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்குவோம்” என்று செவ்வாய்க்கிழமை (ஏப்.12) சூசகமாக ட்வீட் செய்திருந்தார் பகவந்த் மான். அந்த நற்செய்தி இதுதான் என்று குதூகலிக்கிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர்.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்த அர்விந்த் கேஜ்ரிவால், உபரி மின்சாரம் கிடைக்கும் அளவுக்கு பஞ்சாபில் மின் உற்பத்தி இருந்தாலும், நீண்ட நேர மின்வெட்டு நிலவுவதாகவும், சிலர் மின்சாரத் திருட்டில் ஈடுபடுவதால் பல கிராமங்களில் வசிப்பவர்களுக்குத் தவறான மின்கட்டணம் பில் வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மாதம் 200 யுனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in