மதுரை விமான நிலையத்திற்குச் சுற்றி 35 கோடிக்கு சுற்றுச்சுவர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது ஆணையம்

மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையம்படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை விமான நிலையத்தைச் சுற்றி கையகப்படுத்தப்பட்ட 510 ஏக்கர் நிலங்களைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பதற்கான ரூ. 35 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி விமான நிலைய ஆணையத்தால் கோரப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் சர்வதேச அளவிலான விமானங்கள் வந்து செல்வதற்காக விமான ஓடுதளத்தின் நீளத்தை அதிகரித்து, கூடுதல் முனையங்கள் ஏற்படுத்தி விரிவாக்கம் செய்யும் திட்டம் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை. மேலும், விமானநிலையத்தை விரிவாக்கம் செய்தால் பெரிய அளவிலான விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து இங்கு நேரடியாக இயக்கலாம். ஆனால், விமான நிலைய விரிவாக்க பணி தற்போது வரை துவங்கப்படவில்லை.

இந்நிலையில், விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்ற நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு பெற்றது. மேலும், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 510 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்திய மாநில அரசு நிலங்களை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்தது.

இதனையடுத்து, மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ. 35 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 30-ம் தேதி இந்த ஒப்பந்தபுள்ளிக்கு கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு 14 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, புதிதாக வான்வெளி கட்டுப்பாட்டு மையம் ரூ. 97 கோடியே 44 லட்சம் செலவில் அமைக்க ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கான அடுத்தடுத்த ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு வரும் நிலையில், விரைவில் மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in