சென்னையில் பெயர் பலகை விழுந்து பறிபோன உயிர்: அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது

சென்னையில் பெயர் பலகை விழுந்து பறிபோன உயிர்: அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது

சென்னையில் மாநகர பேருந்து மோதி பெயர் பலகை விழுந்ததில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சென்னை தாம்பரத்ததில் இருந்து கோயம்பேடு நோக்கி மாநகர பேருந்து ஒன்று நேற்று மதியம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பரங்கிமலை வழியாக ஆலந்தூர் கத்திப்பாரா மெட்ரோ ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தை நோக்கி பேருந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் பேருந்தை வளைவில் திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த வழிகாட்டி பெயர் பலகை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வழிகாட்டி பெயர் பலகை சாலையின் குறுக்கே சரிந்து விழுந்தது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகசுந்தரம் (29), மினிவேன் ஓட்டுநர் ஜான்பீட்டர் (43) மற்றும் பேருந்து பயணிகள் 3 பேர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சண்முகசுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், காயமடைந்த வேன் ஓட்டுநர் மற்றும் பயணிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பின்னர், காவல்துறையினர் கிரேன் உதவியுடன் சாலையில் விழுந்த பெயர் பலகையை அகற்றியதுடன், சேதமடைந்த பேருந்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய மாநகரப் பேருந்து ஓட்டுநர் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த ரகுநாத் (44), நடத்துநர் சின்னையன் ஆகியோர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகசுந்தரம் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பரங்கிமலை போக்குவரத்து காவல்துறையினர், அஜாக்கிரையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல், தனிநபருக்கு காயம் ஏற்படுத்துதல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல், அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் ரகுநாத்தை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in