
தனது பிறந்த நாளில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்துதந்த வட மாநில வாலிபர் ஒருவரின் செயல் வைரலாகி வருகிறது.
தற்கால இளைஞர்கள் பலரும் தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்றால் நண்பர்களை அழைத்து கேக் வெட்டுவது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சிலரோ அன்றைய தினம் மது விருந்தும், அசைவ உணவையும் கூட்டாக சேர்ந்து அருந்துவது என்பதாக கொண்டிருக்கிறார்கள். வேறு சிலரோ கடற்கரை ரிசார்டுகளில் விடிய விடிய கூத்தடிப்பது, உல்லாச பயணம் செல்வது தான் கொண்டாட்டம், அதுதான் பிறந்தநாளில் மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு சிலர்தான் தங்கள் பிறந்த நாளில் யாருக்கேனும் உதவ வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆதரவற்றோருக்கு உதவுதல், கோயில்களில் அன்னதானம் அளித்தல் என இந்த பட்டியல் நீள்கிறது. இத்தகைய மனித பண்பு தமிழகத்தில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் தற்போது பரவியுள்ளதைக் காணமுடிகிறது.
வடமாநிலத்தைச் சேர்ந்த நல்ல வசதி படைத்த வாலிபர் ஒருவர் தனது பிறந்த நாளில் மிகவும் வறிய நிலையில் உள்ள யாராவது ஒருவருக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தார். அதனையடுத்து தனது காரில் யாருக்கு உதவலாம் யோசித்து கொண்டே நகரை சுற்றி வந்தார். அங்கு ஓரிடத்தில் சாலை ஒர குப்பையில் பழைய காகிதங்களை பொறுக்கிக் கொண்டிருந்தார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர்.
குப்பையில் கிடக்கும் பேப்பர்களைப் பொறுக்கி அதை விற்று கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் அந்த மூதாட்டியைப் பார்த்ததும் காரை விட்டு இறங்கிய அந்த வாலிபர், மூதாட்டியை பற்றி விசாரிக்கிறார். அதனையடுத்து அவரை தனது காரில் ஏற்றி மூதாட்டியை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். மிகச் சிறிய குடிசையான அந்த வீட்டுக்குள் சென்று மூதாட்டியின் நிலைமையை நேரடியாகவே பார்த்து தெரிந்து கொள்கிறார்.
உடனடியாக அவரை கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்று அவருக்கு தேவையான புத்தாடைகள், வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி காரில் ஏற்றிக்கொண்டு வந்து வீட்டில் இறக்கி மூதாட்டியை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தினார். அதன் பின்னரும் அந்த வாலிபரின் உதவும் உள்ளம் ஓய்ந்து போய்விடவில்லை.
திரும்பவும் கடைத்தெருவுக்கு செல்கிறார். ஒரு தள்ளுவண்டி, காய்கறிகள், எடை தராசு ஆகியவற்றை தேடித்தேடி வாங்கி வந்து ஆதரவற்ற அந்த மூதாட்டிக்கு கொடுத்து காய்கறி கடை தொடங்க சொல்கிறார். நெகிழ்ந்துபோன அந்த மூதாட்டி தனது தள்ளுவண்டி காய்கறி கடையை அந்த இளைஞரை வைத்தே தொடங்குகிறார். தனது பொருளாதாரம் உயர தேடி வந்து உதவிய அந்த வாலிபரை முகத்தில் புன்னகை ததும்ப தலையில் கை வைத்து மனதார வாழ்த்துகிறார்.
இந்த வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் தற்போது பரவி வருகிறது. இந்த வாலிபரின் செயலை இந்த வீடியோவை பார்க்கும் அனைவருமே பாராட்டி வருகின்றனர். வசதி படைத்தோர் தங்கள் மற்றும் உறவினர் பிறந்த நாள் உள்பட இதர விழாக்களில் அந்தஸ்து, ஆடம்பரம் என வீணடிக்கும் பணத்தை இது போன்று ஆதவற்றோர் வாழ்க்கை தரம் உயர உதவலாம் என்கிற எண்ணத்தை அழுத்தமாக விதைத்து இருக்கிறார் அந்த இளைஞர்.