கணவரை இழந்து மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவின்றி தவித்தப் பெண்: 24 மணி நேரத்திற்குள் உதவி செய்து நெகிழவைத்த ஆட்சியர்!

கணவரை இழந்து மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவின்றி தவித்தப் பெண்: 24 மணி நேரத்திற்குள் உதவி செய்து நெகிழவைத்த ஆட்சியர்!

கணவரை இழந்து மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவு இன்றி தவித்த பெண்ணுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் மலுமிச்சம்பட்டி திட்டப் பகுதி குடியிருப்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை வீடு தேடிச் சென்று கோவை ஆட்சியர் சமீரன் இன்று நேரில் வழங்கினார்.

கோவை செட்டிபாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தனது 14 வயது மனவளர்ச்சி குறைபாடுடைய மாற்றுத்திறன் கொண்ட மகன் ராமசாமியுடன், ஷீலா (44) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கோபால் 13 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த ஷீலாவுக்கும், அவரது மாற்றுத்திறனாளி மகனுக்கும், மணியம்மாள் (வயது 63) என்ற மூதாட்டி தன்னுடன் தன் வீட்டிலே தங்கவைத்து 13 ஆண்டுகளாக உதவி புரிந்து வருகிறார். ஷீலாவுக்கு மூதாட்டி உறவு முறை இல்லை என்றாலும் கூட மனிதநேயத்துடன் தன்னுடன் தங்கவைத்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். மாற்றுதிறன் கொண்ட சிறுவனை அருகில் இருந்து எப்போதும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை என்பதால் ஷீலாவினால் வேலைக்கு கூட செல்ல முடியாத நிலை இருந்தது.

தமிழக அரசின் மாற்றுதிறனாளி நல உதவி தொகையே இவர்கள் குடும்பத்தின் பெரிய வாழ்வாதாரம். அது தவிர ஷீலா மற்றும் அவரது மகனுக்கு உறுதுணையாக கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலைக்கு ரூ.6500 ஊதியத்துடன் கடந்த அக்டோபர் மாதம் வரை மணியம்மாள் சென்று வந்துள்ளார். வயது மூப்பு காரணமாக பணியை விட்டு நின்றுவிட்டு தற்போது 4 ஆடுகள் வாங்கி பராமரித்து வருகிறார். தனது காலத்துக்கு பின்னர் ஷீலாவும், அவரது மகனும் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிப்பார்கள் என்பதால் அவர்களை அழைத்து கொண்டு நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் கலெக்டர் சமீரனிடம் மனு அளித்தார்.

அவர்களின் சூழ்நிலையை உடனடியாக பரிசீலனை செய்த ஆட்சியர், மனு அளித்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் மலுமிச்சம்பட்டி திட்ட பகுதி குடியிருப்பில் உடனடியாக வீடு ஒன்றை ஒதுக்கி உத்தரவு வழங்கினார். அந்த உத்தரவை கலெக்டரே பயனாளி ஷீலா வசிக்கும் இடத்துக்கு இன்று நேரில் சென்று வழங்கினார். மனிதநேய அடிப்படையில் ஷீலா, அவரது மகனுக்கு உதவி செய்து உறுதுணையாக இருந்த மணியம்மாளையும் கலெக்டர் சமீரன் வெகுவாகப் பாராட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in