கந்து வட்டி கொடுமை; மகன்களுடன் உயிரை மாய்க்க வந்த பெண்: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கந்து வட்டி கொடுமை; மகன்களுடன் உயிரை மாய்க்க வந்த பெண்: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருநெல்வேலியில் முந்தைய அதிமுக ஆட்சியில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது இருந்தே நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கும்வகையில் கூடுதல் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு, மண்ணெண்ணெய் உடன் வந்த பெண்ணை போலீஸார் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையைச் சேர்ந்தவர் வளன். இவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி பியோனி தன் நான்கு மகன்களுடன் ஆட்சியரிடம் மனு ஒன்றைக்கொடுக்க வந்தார். அப்போது அவரது கையில் ஒரு பை இருந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் காவலுக்கு நின்றவர்கள் அந்த பையை வாங்கி சோதித்துப் பார்த்தனர். அதில் ஒரு கேனில் மண்ணெண்ணெய் இருந்தது. போலீஸார் பியோனியை விசாரித்தபோது அவர் தற்கொலை செய்யும் முடிவோடு வந்திருப்பது தெரியவந்தது.

போலீஸாரிடம் பியோனி கூறுகையில், “என் கணவர் வெளிநாட்டில் முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் எனச் சொன்னதால் வேலைக்குச் சென்றார். அதற்கு வெளிநாடு செல்ல எங்கள் ஊரைச் சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். வெளிநாட்டில் சொன்னதுபோல் அவருக்கு முப்பதாயிரம் சம்பளம் கொடுக்கவில்லை. 15 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் கொடுத்தனர். இந்நிலையில் அவருக்கு அங்கு ஒரு விபத்து ஏற்பட்டு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் வேலைக்கும் செல்ல இயலவில்லை. இந்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் இப்போதைய சூழலை எடுத்துச்சொல்லியும் கந்துவட்டி கேட்டுக் கொடுமை செய்கிறார்கள். ஏற்கெனவே 6 ஆண்டுகளாக வட்டி கொடுத்து வருகிறேன். இந்த ஒருமாதம்தான் வட்டி கொடுக்க முடியவில்லை.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். நான் என் வீட்டை விற்று அவர்களின் முழுக்கடனையும் அடைக்கும் முடிவில் உள்ளேன். அதற்கு ஆறுமாதம் அவசாகம் வேண்டும். அதற்கு நீதி கிடைக்காவிட்டால் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலை செய்யும் முடிவோடு வந்தேன்” எனச் சொன்னார். இதனைத் தொடர்ந்து போலீஸார் மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் சேர்த்துவிட்டு, பியோனியை அறிவுரை சொல்லி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in