‘தோளில் இருந்த சுமை இறங்கிவிட்டது; நிம்மதியாக உணர்கிறேன்’ - சோனியா காந்தி உருக்கம்!

சோனியா காந்தி
சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக, மல்லிகார்ஜுன கார்கே இன்று பதவியேற்றிருக்கும் நிலையில், தனது கடைமையைச் சிறப்பாகச் செய்ததாகவும், பொறுப்பிலிருந்து விடுபட்டிருப்பதால் நிம்மதியாக உணர்வதாகவும் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார்.

2000 நவம்பரில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில், 98.75 சதவீத வாக்குகளுடன் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜிதேந்திர பிரசாதாவுக்கு 94 வாக்குகளே கிடைத்தன. அதன் பின்னர் 2017-ல் காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அவர் பதவிவிலகினார். இதையடுத்து, கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்ற சோனியா காந்தி, கட்சிக்குள்ளும் வெளியிலும் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டார். தேர்தல் தோல்விகள்; பாஜகவின் வளர்ச்சி ஆகியவை ஒருபக்கம், கட்சிக்கு முழு நேரத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஜி-23 தலைவர்கள் மறுபக்கம் என நிறையவே சோதனைகளை சோனியா சந்தித்தார்.

இதையடுத்து, ஆகஸ்ட் 28-ல் நடந்த செயற்குழுக் கூட்டத்தில், கட்சித் தலைவருக்கு அக்டோபர் 17-ல் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்கு மத்தியில் அக்டோபர் நடந்துமுடிந்த நிலையில், 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூருக்கு 1,072 வாக்குகளே கிடைத்தன. இதைத் தொடர்ந்து, இன்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்றுக்கொண்டார்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய சோனியா, “என்னால் முடிந்த வரையில் எனது கடமையைச் சிறப்பாகச் செய்தேன். இன்று, அந்தப் பொறுப்பிலிருந்து நான் விடுபடுகிறேன். என் தோளில் இருந்த சுமை இறங்கிவிட்டது. நிம்மதியாக உணர்கிறேன். இது மிகப் பெரிய பொறுப்பு. இப்போது மல்லிகார்ஜுன கார்கேயிடம் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார். மேலும், “காங்கிரஸ் நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதும் இன்னொரு சவால். முழு வலிமையுடன், ஒற்றுமையுடன், நாம் முன்னேறி வென்றாக வேண்டும்” என்றும் சோனியா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in