ராகுலுடன் நடைபயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 'யாத்திரை கணேசன்' திடீர் உயிரிழப்பு: காங்கிரஸார் அதிர்ச்சி

யாத்திரை கணேசன்
யாத்திரை கணேசன்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர் கணேசன் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடை பயணத்தில் அஞ்சலி செலுத்தும் ராகுல்
நடை பயணத்தில் அஞ்சலி செலுத்தும் ராகுல்

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் தொண்டர் கணேசன். தஞ்சை மாவட்ட சேவாதளம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை ஏற்று, திருமணம் செய்துகொள்ளாமலேயே முழுநேர ஊழியராக கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தார். யாத்திரை பிரியரான இவர்   குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்ற பல்வேறு நடை பயணங்கள் தொடங்கி சமீபத்தில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை வரையிலும் அனைத்திலும் கலந்து கொண்டவர். அதனால் கட்சிக்காரர்கள் மற்றும் பொது மக்களால் 'யாத்திரை கணேசன்' என்று அழைக்கப்பட்டார்.

தன்னுடைய வழக்கப்படியே தற்போதும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கணேசன் கலந்து கொண்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில், மகாராஷ்டிரா மாநிலத்தில், யாத்திரைக் குழுவினர் தங்கி இருந்த இடத்திலேயே  மாரடைப்பு ஏற்பட்டு  கணேசன் உயிரிழந்தார். 

இது ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்  கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அவரது  மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று தனது நடைபாதை தொடங்கிய போது ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். 

'கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணத்தில் தம்மை இணைத்துக்கொண்ட யாத்திரை கணேசன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டபோது காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 

அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.  யாத்திரை கணேசன்  மறைவால் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in