
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு டிக்கெட் எங்கே எனக் கேட்டு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்துக் கழகம் பாதிக்கப்பட்டவருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நாகர்கோவில் அருகே உள்ள பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வவேல். இவர் சிலவாரங்களுக்கு முன்பு தாழக்குடி பகுதியில் இருந்து தன் மனைவி, இரண்டரை வயது மகளுடன் நாகர்கோவிலுக்கு அரசுப் பேருந்தில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பேருந்து வீரநாயணமங்கலம் பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது டிக்கெட் பரிசோதகர் ஏறினார். அவர் செல்வவேலிடம் குழந்தைக்கு ஏன் டிக்கெட் எடுக்கவில்லை எனக் கேட்க, செல்வவேல் தன் குழந்தைக்கு இரண்டரை வயதே ஆன விபரத்தைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர்," உங்கள் குழந்தைக்கு மூன்று வயது இருக்கும் எனவும், ஏன் டிக்கெட் எடுக்கவில்லை? அபராதத்தைக் கட்டுங்கள்" எனவும் சொன்னார். செல்வவேல் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் வேறு வழியின்றி செல்வவேல் 500 ரூபாய் அபராதம் கட்டினார். அதற்கும் ரசீது எதுவும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக நாகர்கோவிலில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் செல்வவேல் வழக்குத் தொடுத்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் போக்குவரத்துக் கழகத்தின் சேவைக் குறைபாட்டை சுட்டிக்காட்டி 10 ஆயிரம் அபராதமும், வழக்குச் செலவுக்காக 2 ஆயிரம், டிக்கெட் பரிசோதகர் அபராதமாக வாங்கிய 500 ரூபாய் என மொத்தம், 12,500 ரூபாயை ஒரு மாதக் காலத்திற்குள் செல்வவேலிடம் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.