இந்தியாவில் இதுவே முதல்முறை; மூன்றாம் பாலினத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது: தாயும், சேயும் நலம் என அறிவிப்பு

சஹத் - சியா தம்பதி
சஹத் - சியா தம்பதிமூன்றாம் பாலினத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது: தாயும், சேயும் நலம் என அறிவிப்பு

மூன்றாம் பாலினத் தம்பதிகளான சஹத்- சியாவுக்கு நேற்று குழந்தை பிறந்தது. இதன்மூலம் இந்தியாவிலேயே குழந்தை பெற்ற முதல் திருநர் தம்பதி என்னும் பெருமையும் இவர்கள் பெற்றனர். இந்தத் தம்பதியை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வாழ்த்தினார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் மூன்றாம் பாலின தம்பதியான சஹத் - சியா. சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். சியா பவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்.

இதில் சஹத் பாசில் ஆணாக மாறியிருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. அவர் சியா மூலம் கருத்தரித்தார். இதன் காரணமாகவே அவரால் கர்ப்பமாக முடிந்துள்ளது. மருத்துவர்கள் சஹத்திற்கு அடுத்த மாதம் 4-ம் தேதி தான் பிரசவ தேதி கொடுத்தனர். ஆனால் முன்கூட்டியே பிரசவ வலியை உணர்ந்ததால் சஹத் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு நேற்று இவர்களுக்கு குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், தம்பதிகளை அலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்னார். மேலும், விரைவிலேயே குழந்தையை நேரில் வந்து பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

திருநர் தம்பதி தங்களுக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்த நிலையில், என்ன குழந்தை பிறந்தது என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்லை. முன்கூட்டிய பிரசவமாக இருந்தாலும் தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in