
தனது கள்ளத்தொடர்பிற்கு இடையூறாக இருந்த மனைவிக்கு விஷஊசி போட்டு கொல்ல முயன்ற கணவர், மாமியாருக்கு மயக்க ஊசி செலுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை- காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேட்டரிங் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீதரன் (27), அதே மருத்துவமனையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த கீர்த்தனா (27) என்பவரை நான்கு வருடங்களாக காதலித்து, 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர், குடும்பத்துடன் கோவை வீரியம் பாளையத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் கீர்த்தனா நேற்று புகார் கொடுத்தார். அதில், 'சில மாதங்களுக்கு முன் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எனது உடலில் விஷத்தன்மை கலந்துள்ளதாக கூறினர். சிகிச்சைக்குப் பிறகு குணமாகி வீடு திரும்பினேன். என் கணவர் அவருடன் மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கேட்டதற்கு என்னை அடித்து துன்புறுத்தினார். எனக்கு சில மாதங்களுக்கு முன் விஷ ஊசி போட்டதையும் தெரிவித்தார். அவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், " ஸ்ரீதரனுக்கு அவருடன் மருத்துவமனையில் பணியாற்றிய ரம்யா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை ரம்யா, ஸ்ரீதருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இதில், நட்பு, கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் பணிபுரியம் பழனி என்பவர் உதவியுடன் தங்களுக்கு இடையூறாக இருக்கும் கீர்த்தனாவிற்கு பூச்சிக்கொல்லி மருந்தை பாலில் கலந்து கொடுத்துள்ளனர். அத்துடன் கீர்த்தனாவிற்கு விஷஊசியும், அவரது தாய் கீதாலட்சுமிக்கு மயக்க ஊசியும் போட்டு அதே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் கீர்த்தனா மூன்று வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுதொடர்பான அவரின் புகாரின் பேரில் ஸ்ரீதரன் கைது செய்யபபட்டுள்ளார். ரம்யா உள்ளிட்ட மூவரை தேடி வருகிறோம்" என்றனர். மனைவியை விஷஊசி போட்டு கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.