ஆபாச எஸ்எம்எஸ், முகநூலில் செல்போன் எண் பதிவு: இளம்பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த வாலிபர் சிக்கினார்

ஆபாச எஸ்எம்எஸ், முகநூலில் செல்போன் எண் பதிவு: இளம்பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த வாலிபர் சிக்கினார்

பெண்ணுக்கு செல்போனில் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரது செல்போன் எண்ணை முகநூலில் பகிர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். சுய தொழில் செய்து வரும் அந்த பெண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் கடந்த மாதம் 22-ம் தேதி அவரை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். பின்னர் ஆபாசக் குறுஞ்செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

மேலும், அப்பெண்ணின் தொடர்பு எண்ணை தனது முகநூலில் பாலியல் தேவைகளுக்காக தொடர்புகொள்ளவும் எனக் கூறி பகிர்ந்துள்ளார். இதனால் பலர் அவரை தொடர்பு கொண்டு பாலியல் உறவுக்கு அழைத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் கடந்த மாதம் 25-ம் தேதி தியாகராயநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவிலும் அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் குறுஞ்செய்தி வந்த தொடர்பு எண் மற்றும் முகநூல் கணக்கை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மர்ம நபர், பாதிக்கப்பட்ட பெண் வாழும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷை நேற்று மாலை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in