செல்போன் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை: சமரசம் செய்யச் சென்றவர் குத்திக்கொலை!

வாலிபர் கொலை
வாலிபர் கொலைசெல்போன் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை: சமரசம் செய்யச் சென்றவர் குத்திக்கொலை!

சின்னமனூரில் செல்போன் கொடுக்கல். வாங்கல் பிரச்சினையில் சமரசம் செய்யச் சென்ற வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சார்ந்தவர் யுவராஜா. இவரது செல்போனை இவரது நண்பரான சின்னமனூர் பகுதியைச் சார்ந்த ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி(25) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வாங்கிச் சென்றுள்ளார். அந்த செல்போனை அவரிடமிருந்து யுவராஜா பலமுறை கேட்டதாகவும் ஆனால் அதற்கு ஒண்டி தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

சின்னமனூரில் உள்ள  ஒண்டியிடம் இருந்து செல்போனை வாங்கித் தரக் கூறி இருவருக்கும் பொதுவான நண்பரான வினோத் குமார் என்பவரை யுவராஜ் அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள வாரச்சந்தையின் அருகே ஒண்டி அவரது நண்பர்களுடன் இருந்துள்ளார்.அப்போது செல்போன் பற்றிய பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது  இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வினோத் குமாரை சரமாரியாகக் குத்தினார். இதில் படுகாயமடைந்த வினோத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே வினோத் குமாரை குத்தி விட்டு ஒண்டி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.  இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் இன்று காலை சிகிச்சையில் இருந்த வினோத்குமார் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதனை அடுத்து சின்னமனூர் காவல்துறையினர் இந்த வழக்கினை கொலை வழக்காக மாற்றம் செய்து தப்பி ஓடிய ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி மற்றும் அவருடன் இருந்த நண்பர்கள் சிலரையும் தேடி வருகின்றனர். செல்போன் பிரச்சினைக்காக வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சின்னமனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in