8 ஆண்டு சிகிச்சை பலனளிக்கவில்லை; வழுக்கை தலையால் தடைப்பட்ட திருமணம்: உயிரை மாய்த்த 29 வயது வாலிபர்

8 ஆண்டு சிகிச்சை பலனளிக்கவில்லை; வழுக்கை தலையால் தடைப்பட்ட திருமணம்: உயிரை மாய்த்த 29 வயது வாலிபர்

கேரளத்தில் ஹார்மோன் பிரச்சினையால் தலைமுடி கொட்டி வழுக்கை ஏற்பட்ட துயரத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் அத்தோலி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். மெக்கானிக்கான இவர் தன் வழுக்கை தலையின் காரணமாக தற்கொலை செய்திருக்கிறார். இவர் தன் தற்கொலை குறித்து எழுதிய உருக்கமான கடிதத்தையும் அத்தோலி போலீஸார் கைப்பற்றினர்.

இவ்வழக்கின் விசாரணை அதிகாரி முரளி இதுகுறித்துக் கூறுகையில், “பிரசாந்த்திற்கு 29 வயது ஆகிறது. அவருக்கு ஹார்மோன் பிரச்சினையால் முடிகொட்டியுள்ளது. இதற்காக கோழிக்கோடில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துள்ளார். தாமரச்சேரி பகுதியில் உள்ள வாகன ஷோரூம் ஒன்றில் மெக்கானிக்காக இருக்கும் பிரசாந்த் இதற்கு முன்பும் பல சிகிச்சைகளை எடுத்துக்கொண்டும் அவருக்கு முடி கொட்டும் பிரச்சினை நிற்கவில்லை. 2014 முதலே சிகிச்சை பெற்றும் பிரச்சினை தீரவில்லை. வழுக்கைத் தலையின் காரணமாக அவருக்குத் திருமணமும் தள்ளிப்போனது.

அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், சிகிச்சை எடுத்துக்கொண்ட க்ளினிக், சிகிச்சை கொடுத்த மருத்துவரையும் குற்றம் சாட்டியுள்ளார். ஆரம்பத்தில் சிகிச்சைக்கு வந்தபோது லேசான முடி உதிர்தல் பிரச்சினைதான் இருந்ததாகவும், நாள்பட இந்த மருந்தை எடுத்துக்கொள்ள பிரச்சினை அதிகமானதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒருகட்டத்தில் அவரது புருவமுடிகள் கூட உதிர்ந்துவிட்டதாகவும் இதனால் வெளியில் தலைகாட்டமலேயே இருந்ததாகவும், ஆனால் மருத்துவர் தொடர்ந்து மருந்து கொடுத்துவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். வழுக்கையால் திருமணமும் நடக்காமல்போக அந்த விரக்தியில் தற்கொலை செய்துள்ளார்” என்றார்.

இவ்விசயத்தில் மருத்துவ அலட்சியம் எதுவும் இருந்ததா? என்பது குறித்து மருத்துவரையும் நேரில் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in