பைக் வாங்க 1.80 லட்சம் சில்லறையுடன் வந்த வாலிபர்: 2 மணி நேரம் எண்ணி சோர்வான ஷோரூம் ஊழியர்கள்

பைக் வாங்க 1.80 லட்சம் சில்லறையுடன் வந்த வாலிபர்: 2 மணி நேரம் எண்ணி சோர்வான ஷோரூம் ஊழியர்கள்

இருசக்கர வாகனம் வாங்க 1.80 லட்சம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயத்தை மூட்டைகளில் கட்டுக்கொண்டு வாலிபர் ஒருவர் வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த சில்லறையை எண்ணி முடிக்க 2 மணி நேரம் ஆனதால் ஊழியர்கள் சோர்வடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜீவ். இவர் கடந்த 3 ஆண்டுகளாக இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் உண்டியலில் 10 ரூபாய் நாணயங்களாக சேர்த்து வந்துள்ளார். 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சேர்ந்த உடன் இருசக்கர வாகனம் வாங்க முடிவு செய்துள்ளார் ராஜீவ். அதன்படி, சில்லறையை 6 மூட்டைகளில் கட்டுக் கொண்டு காரில் ஓசூரில் உள்ள ஷோரூமிற்கு நேற்று வந்துள்ளார். அப்போது, தான் கொண்டு வந்த சில்லறையை ஷோரூம் ஊழியர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் ஷோரூமில் மூட்டைகளில் கட்டி கொண்டுவரப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை கொட்டி ஊழியர்கள் எண்ணி முடிக்க 2 மணி நேரம் ஆனது. இந்த நாணயத்தை நீண்ட நேரம் எண்ணியதால் ஊழியர்கள் சோர்வடைந்தனர். இதன் பின்னர் இருசக்கர வாகனத்தை ராஜீவ் வாங்கிச் சென்றார்.

அனைத்து இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வாறு செய்ததாக ராஜீவ் கூறினார். கோவையில் 10 ரூபாய் நாணயத்தை யாரும் வாங்குவதில்லை. குறிப்பாக அரசு பேருந்துகளில் கூட நடத்துனர்கள் பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவது கிடையாது. அங்கு 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற நிலை ஏற்பட்டது. தற்போது வாலிபர் ராஜீவ் செய்தது அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in