தோழிகள் வாக்குமூலம், உடல்கூராய்வு ஆய்வறிக்கை தாக்கல்: பரபரப்பான கட்டத்தில் கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு

தோழிகள் வாக்குமூலம், உடல்கூராய்வு ஆய்வறிக்கை தாக்கல்: பரபரப்பான கட்டத்தில் கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவியின் உடற்கூராய்வு ஆய்வறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக் குழுவினர் நேற்று மாலை தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம் இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவி கடந்த மாதம் 13-ம் தேதியன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் உடலை அவர்கள் வாங்க வராத நிலையில் அவர்களின் கையொப்பமின்றி மாணவியின் உடல் கடந்த மாதம் 14-ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மாணவியின் பெற்றோர் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில், உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர், அரசு மருத்துவர்கள் மூன்று பேரைக் கொண்ட குழுவினரின் முன்னிலையில் மாணவியின் உடல் கடந்த மாதம் 19-ம் தேதியன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பிரேதப் பரிசோதனையின்போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க வேண்டும் என்ற பெற்றோரின் வேண்டுகோள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அதனால் அந்த முறையும் பெற்றோர் கையெழுத்து இன்றியே அவர்கள் வராமலேயே பிரேத பரிசோதனை நடைபெற்றது.

இப்படி இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகும் மாணவியின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்ததைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் குஷகுமார் சாஹா, தடயவியல் துறைத்தலைவர் டாக்டர் சித்தார்த்தாஸ், தடயவியல் துறை கூடுதல் பேராசிரியர் டாக்டர் அம்பிகா பிரசாத்பத்ரா ஆகிய 3 பேரை கொண்ட ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், இந்த குழுவினர் மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தங்கள் ஆய்வறிக்கையை, மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து பிரேத பரிசோதனை முடிவுகளை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மூலமாக கடந்த 1-ம் தேதியன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஒப்படைத்தனர். மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகளை முழுமையாக ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவக் குழுவினர் அதனை அறிக்கையாக தயார் செய்து மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாக்கல் செய்தனர்.

நேற்றைய தினம் மாணவியின் தோழிகள் இருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில், ஜிப்மரின் பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இந்த வழக்கு இனி சரியான திசையில் வேகமாக செல்லத் தொடங்கும் எனவும், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையும் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால் விரைவில் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியாவது இந்த வழக்கில் இருக்கும் மர்மங்கள் விலகி உண்மை வெளிப்பட்டால் அனைவருக்கும் நல்லதுதான்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in