தங்கம், பிளாட்டினம் கொள்ளைப் போனதாக நாடகமாடிய தொழிலதிபர்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

தங்கம், பிளாட்டினம் கொள்ளைப் போனதாக நாடகமாடிய தொழிலதிபர்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கத்தி முனையில் 4.5 கிலோ தங்கம், 3 கிலோ பிளாட்டினம் கொள்ளையடித்து சென்ற வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வியாபாரத்திற்காக வாங்கிய தங்கத்தை திருப்பி கொடுத்து விட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியது விசாரணையில் அம்பலமானதால் புகார் அளித்த தொழிலதிபர் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியம் (51). இவர் கடந்த 23-ம் தேதி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "தனது நண்பர் சோனி (40) என்பவருடன் இணைந்து பாண்டிபஜார் கோவிந்த் தெருவில் சனோயா இண்டர்நேஷனல் டிரேடிங் என்ற பெயரில் தங்கம் மற்றும் பிளாட்டினம் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தேன். கடந்த 1 வருடத்திற்கு முன்பு நண்பர் மூலம் கேரளாவை சேர்ந்த தங்கநகை மொத்த வியாபாரம் செய்யும் ஜூனேஷ்(39), ராஜேஷ்(50) என்பவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 23-ம் தேதி ஜூனேஷ், ராஜேஷ் ஆகியோர் வியாபாரம் சம்மந்தமாக தனது அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் திடீரென ஜூனேஷ் , ராஜேஷ் ஆகியோர் சேர்ந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிதோடு, எங்களை கட்டிப்போட்டு விட்டு 4.5 கிலோ தங்கம், 3 கிலோ பிளாட்டினம், கணினி ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தங்களிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதுடன் தனது காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் பாண்டிபஜார் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஜூனேஷ், ராஜேஷ் ஆகியோர் பையில் தங்கம் மற்றும் பிளாட்டினத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் ராஜேஷ், ஜூனேஷ் மீது கொலை மிரட்டல், நகைப் பறிப்பு, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, கேரளாவில் பதுங்கி இருந்த ஜூனேஷ், ராஜேஷ் ஆகியோரை பிடித்து பாண்டிபஜார் தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கேரளாவில் ராஜேஷும், ஜூனேஷும் சேர்ந்து தங்கம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர்.

கடந்த 1 வருடமாக சென்னையை சேர்ந்த ராமசுப்பிரமணியம் மற்றும் சோனி ஆகியோரிடம் தங்கத்தை கொடுத்து வியாபாரம் செய்து வந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராஜேஷ், ஜூனேஷ் இருவரும் சேர்ந்து ராமசுப்பிரமணியத்திடம் 8 கிலோ தங்கக் கட்டிகள் கொடுத்து விற்பனை செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர். ராமசுப்பிரமணியன் தங்கத்தை வாங்கி விற்பனை செய்து விட்டு அதற்குண்டான பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 23-ம் தேதி சென்னை வந்த ஜூனேஷ், ராஜேஷ் ஆகியோர் ராமசுப்புரமணியன் அலுவலகத்திற்கு சென்று 8 கிலோ தங்கத்தை திருப்பி தருமாறு கேட்ட போது 4.5 கிலோ தங்கம் மட்டுமே இருப்பதாக ராமசுப்பிரமணியம் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். மீதி தங்கத்தை பற்றி கேட்டதற்கு கடைகளில் கொடுத்திருப்பதாக பொய் கூறியுள்ளார். பின்னர் ராம சுப்பிரமணியம் தங்கத்திற்கு பதிலாக பணம், 3 கிலோ பிளாட்டினம், கணினி மற்றும் காரை அவர்களுக்கு கொடுத்து பணம் வழங்கியதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்ததை அடுத்து கொள்ளையடித்து சென்றதாக பொய் புகார் அளித்த ராமசுப்பிரமணியம் தலைமறைவானார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதால் ஜூனேஷ், ராஜேஷ் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளதால் வழக்கை நீதிமன்றம் மூலமாக தீர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in