வர்த்தக எரிவாயு விலை திடீர் குறைப்பு: வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை எவ்வளவு?

வர்த்தக எரிவாயு விலை திடீர் குறைப்பு: வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை எவ்வளவு?

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு விலை திடீரென குறைத்துள்ளது எண்ணெய் நிறுவனங்கள். ஆனால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமுமில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை வைத்து பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படும் நிலையில், எரிவாயு விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைத்து வருகிறது எண்ணெய் நிறுவனங்கள்.

கடந்த மார்ச் 22-ம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டு, ரூ.965.50க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு அதாவது, மே மாதம் 7-ம் தேதி மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ஒரு சமையல் எரிவாயு விலை ஆயிரத்தை தாண்டியது. அதே நேரத்தில் வர்த்தக எரிவாயு விலை ரூ.9.50 குறைக்கப்பட்டு ரூ.2,498.50க்கு விற்பனையாகி வந்தது. இதனிைடயே, மே மாதத்தில் 2-வது முறையாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.1018.50க்கும், வர்த்தக எரிவாயு விலை ரூ.8.50ம் உயர்த்தப்பட்டு ரூ.2,507க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஜூன் மாதத்தில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.134 குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அதேநேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எரிவாயு விலை ரூ.187 குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தக எரிவாயு விலை ஒன்று ரூ.2,186 ஆக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in