வெவ்வேறு காரணங்கள்... அடுத்தடுத்து கொல்லப்பட்ட பெண், வாலிபர்: பரபரக்கும் விருதுநகர்

வெவ்வேறு காரணங்கள்... அடுத்தடுத்து கொல்லப்பட்ட பெண், வாலிபர்: பரபரக்கும் விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், பாண்டியன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால்-சரஸ்வதி தம்பதியினர். சரஸ்வதி, நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சுருளீஸ்வரன், சரஸ்வதி வீட்டிற்குள் திடீரென நுழைந்தார். அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி சுருளீஸ்வரனை வெளியே போகும் படி கூறியுள்ளார். ஆனால், சுருளீஸ்வரன் சரஸ்வதியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கைதான சுருளீஸ்வரன்
கைதான சுருளீஸ்வரன்

இந்நிலையில், சுருளீஸ்வரன் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் சரஸ்வதியின் தலையில் பலமாக தாக்கிவிட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சரஸ்வதி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து, தகவல் அறிந்த பாண்டியன் நகர் காவல்துறையினர் பெரிய பேராலி கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சரஸ்வதி வீட்டுக்கு செல்லும் பொழுது வழியில் சுருளீஸ்வரன் மற்றொரு பெண்ணையும் தாக்கியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சுருளீஸ்வரனை கைது செய்துள்ளனர்.

கொலையுண்ட மாரிச்செல்வம்
கொலையுண்ட மாரிச்செல்வம்

மற்றொரு சம்பவத்தில், விருதுநகர் மாவட்டம் கே.கே.எஸ்.எஸ்.என். நகர் பகுதியில் உள்ள புதர் பகுதியில் நேற்று காலை வாலிபர் ஒருவரின் உடல் வெட்டுக்காயங்களுடன் கிடந்தது. உடலுக்கு சற்று அருகே அவரது கைலி கிடந்ததோடு, பற்களும் உடைந்து சிதறிக் கிடந்தன. இதுகுறித்து, தகவலறிந்த பாண்டியன் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எப்படி உயிரிழந்தார்? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், முத்தால் நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம் என்பதும் தனது தந்தையுடன் சேர்ந்து பெயிண்டிங் செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், கடந்த மூன்று நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவருக்கு மதுப்பழக்கம் இருப்பதால் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியே செல்லும் மாரிச்செல்வம், சில தினங்கள் கழித்து வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாரிச்செல்வத்துடன் தொடர்பில் இருந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in