பள்ளி மாணவனைப் பலி வாங்கிய செல்ஃபி மோகம்: ரயிலில் ஏறி படமெடுக்க முயன்ற போது 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது

பள்ளி மாணவனைப் பலி வாங்கிய செல்ஃபி மோகம்: ரயிலில் ஏறி படமெடுக்க முயன்ற போது 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது

மதுரை கூடல்நகர் குட்ஷெட் பகுதியில் ரயில் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி இன்று உயிரிழந்தார்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் பெரும்பாலான வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் உள்ள மின் கம்பிகளில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்கிறது. இதன் காரணமாக மின்கம்பம் அருகே யாரும் செல்லக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை பலகைகளை முக்கியமான இடங்களில் வைத்துள்ளது.

இந்நிலையில், மதுரை கூடல்நகரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் விக்னேஷ்வர் (17), நேற்று மாலை தனது மூன்று நண்பர்களுடன் கூடல்நகர் குட்ஷெட் பகுதிக்கு விளையாட வந்துள்ளார். ரயில் பெட்டிகள் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் இங்கு வந்த நான்கு பேரும் ரயில் பெட்டிகளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, விக்னேஷ்வர் ரயில் பெட்டியின் மேலே ஏறி செல்ஃபி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, மேலே செல்லும் மின் கம்பியின் மூலம் விக்னேஷ்வர் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை ரயில்வே காவல்துறையினர் விக்னேஷ்வரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சூழலில், ரயில் பெட்டிகளில் மேலே ஏறி மின்கம்பம் அருகே விளையாடுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in