பேருந்து நிழற்குடையில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்:வைரலாகும் வீடியோ

பேருந்து நிழற்குடையில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்:வைரலாகும் வீடியோ

பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கு பேருந்து நிழற்குடையில் அமர வைத்து மாணவன்  தாலி கட்டிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

கடலூர் மாவட்டம் சிதம்பரம்  காந்தி சிலை அருகில்  சுற்றுப்புற  கிராமங்களுக்கு செல்வதற்கான மினி  பேருந்து நிறுத்தம் உள்ளது.  பயணிகள் வசதிக்காக அங்கு பேருந்து நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த நிழற்குடையில்தான்  மாணவிக்கு  தாலி கட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சி  வெங்காயதலமேடு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவியும்,  சிதம்பரம் அருகே உள்ள வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்ற  தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும்  மாணவனும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளனர். அதற்கு அவர்களது நண்பர்கள் ஒத்துழைக்க பேருந்து நிறுத்தத்தில் அமர வைத்து நண்பர்கள் முன்னிலையில்  அந்த  மாணவிக்கு மஞ்சள் கயிற்றை  தாலியாக அந்த மாணவர் கட்டியுள்ளார். முகம்  முழுவதும் சிரிப்பு மலர, வெட்கத்தில்  முகத்தைப் பொத்திக் கொண்டு அந்த மாணவி அதை ஏற்றுக் கொள்கிறார். 

அதற்கு அருகில் உள்ள மாணவர்கள் வாழ்த்து சொல்லி கையில் வைத்திருந்த பூக்களை தூவுகின்றனர்.  இருவருமே மைனர்களாக  இருக்கக்கூடும் என்பது அந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் தீவிர  விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. மாணவர்கள் தாலி கட்டிக் கொள்ளும் இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில்  அதிகரித்துள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in