பிரான்ஸில் ஏலத்துக்குத் தயாரான நடராஜர் சிலை: தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்

பிரான்ஸில் ஏலத்துக்குத் தயாரான நடராஜர் சிலை: தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்

15- ம் நூற்றாண்டைச் சேர்ந்த கயத்தாறு கோயிலுக்குச் சொந்தமான  நடராஜர் சிலை, பிரான்ஸ் நாட்டில் ஏலமிடத் திட்டமிட்டிருந்த நிலையில், அதை தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம்,  கயத்தாறு கோயிலில் இருந்த  கோதண்டராமேஸ்வரர் கோயிலில் இருந்த 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் உலோகச் சிலையானது  கடந்த 1972- ம் ஆண்டில்  திருடுபோனது. இதுதொடர்பாக கோவில்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். 

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள ஒரு தனியார் ஏல மையத்தில் நடராஜர் சிலை ஒன்று  கடந்த வெள்ளிக்கிழமை (டிச.16) அன்று ஏலத்தில் விட இருப்பதாக  தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதன்  ஆரம்பத் தொகையாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் யூரோ வரை நிர்ணயித்திருப்பதாகவும் தெரியவந்தது.

அதன்பேரில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில், அங்கு  இருப்பது கயத்தாறு கோதண்ட ராமேஸ்வரர் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு உயரதிகாரிகள் இந்த ஏலத்தைத் தடுத்து நிறுத்த இந்திய தொல்லியல் துறை மூலமாகவும் நடவடிக்கை எடுத்தனர். 

இதையடுத்து சிலை ஏலமிடப்படுவது தடுக்கப்பட்டது. மேலும், அந்த ஏல மையத்தில் இருக்கும் நடராஜர் சிலையைத் தூதரகம் மூலம் மீண்டும் தமிழகத்துக்குக் கொண்டுவரும் நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும்   3 மாதங்களுக்குள் சிலை தமிழகத்துக்கு   கொண்டு வரப்படலாம்  எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in