ஒன்றரை வயதில் பிரிந்து சென்றார்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு தாய், சகோதரியை தேடிக் கண்டுபிடித்த மகன்!

ஒன்றரை வயதில் பிரிந்து சென்றார்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு தாய், சகோதரியை தேடிக் கண்டுபிடித்த மகன்!

ஒன்றரை வயதில் இருந்தே குஜராத்தில் வசித்துவந்த கோவிந்த் என்னும் வாலிபர் 22 ஆண்டுகளுக்குப் பின்பு கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் வசிக்கும் தன் தாய், சகோதரியை தேடிக் கண்டுபிடித்துள்ளார்.

கேரளத்தின் கோட்டயம் மாவட்டம், நெடுங்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவர் குஜராத்தில் தங்கியிருந்து வேலைசெய்து வந்தார். அப்போது குஜராத்தைச் சேர்ந்த ராம்பாய் என்பவரோடு இவருக்கு கடந்த 1993-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியின் மூத்த மகனான கோவிந்திற்கு ஒன்றரை வயது இருக்கும் போது கீதா மீண்டும் கருவுற்றார். கர்ப்பிணியான தன் மனைவியை கேரளத்தின் நெடுங்குன்னத்தில் இருக்கும் அவரது தாய்வீட்டில் கொண்டுவந்துவிட்ட ராம்பாய் சில காலம் அங்கே வசித்தார். வேலை விசயமாக அவசரமாகச் செல்வதாகச் சொல்லிவிட்டு திடீரென ஒருநாள் கிளம்பிச் சென்றார். அப்போது தன் மகன் கோவிந்தை மட்டும் உடன் அழைத்துச் சென்றார். அதன்பின்பு ராம்பாய் தன் குடும்பத்தினரை சந்திக்க வரவே இல்லை. மீண்டும் குஜராத்திற்குச் சென்ற ராம்பாய் மகன் கோவிந்தை தன் உறவினர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர் நடந்தவைகள் குறித்து கீதா காமதேனு இணையத்திடம் கூறுகையில், “22 வருடங்களாக என் மகன், கணவர் என்ன ஆனார்கள் என்றே தெரியாது. அவ்வப்போது மகனின் நினைவு வந்துசெல்லும். ஆனால் திடீரென்று என் மகன் கோவிந்த் என்னையும், என் மகளையும் தேடிக்கண்டுபிடித்து வந்து நின்றான். எங்களால் நம்பவே முடியவில்லை. கோவிந்த் எங்களைப் பிரிந்து சென்றபோது ஒன்றரை வயதுதான். கோவிந்திற்கு குஜராத்தியும், இந்தியும் தான் தெரியும். ஆனால் அதையெல்லாம்மீறி கோவிந்த் எங்களைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறான். ஒரு காவல் அதிகாரியின் வீட்டின் அருகில் எங்கள் வீடு இருப்பதை சின்ன வயதில் என் கணவர் கூறியிருக்கிறார்.

அதை மனதில் ஆழமாக பதிந்துவைத்து இந்தியும், மலையாளமும் பேசும் சிலரின் உதவியோடு உள்ளூர் காவல் நிலையத்திற்கு வந்து உதவிகேட்டுள்ளார். எங்கள் ஊராட்சி உறுப்பினர் ஸ்ரீஜா மனு என்பவர் மூலம் போலீஸார் எங்களைக் கண்டுபிடித்தனர். இப்போது என் மகள் கோபிகாவுக்கு திருமணம் முடிந்து, பாட்டியும் ஆகிவிட்டேன். என் பேரனைப் போல் வயதில் மகனைப் பிரிந்தேன். 22 ஆண்டுகளுக்கு பின்பு திரும்பி சந்தித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எனக்கு இந்தியும், அவருக்கு மலையாளமும் தெரியாததால் பேசிக்கொள்ள முடியவில்லை. இருந்தும் எங்களுக்குள் பாசத்தை வெளிப்படுத்த மொழி ஒரு தடையாக இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in