சிறுவனுக்கு குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்தது எப்படி?: சிறுமியின் தாய் பரபரப்பு வாக்குமூலம்

சகாயராணி விக்டோரியாவை அழைத்து வரும் போலீஸார்
சகாயராணி விக்டோரியாவை அழைத்து வரும் போலீஸார்

காரைக்கால் பள்ளி மாணவன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின்  தாய்  எலி பேஸ்ட் கலந்த குளிர்பானம் கொடுத்தது உண்மை என்று வாக்குமூலம் அளித்துள்ளார். 

காரைக்கால் மாவட்டம் நேருநகர் பகுதியைச் சேர்ந்த  ராஜேந்திரன் மகன் பாலமணிகண்டன், நேரு நகரில் உள்ள தனியார் ஆங்கில பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டாம் தேதி அன்று விஷம் கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த மூன்றாம் தேதி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் பள்ளி சக மாணவிக்கும், இவருக்கும் படிப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாணவியின் தாய்  குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்திருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. அதனை எடுத்து மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   

மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் சஸ்பெண்ட், சிறுவன் குடும்பத்தினருக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

காரைக்கால்  நகர காவல் நிலைய போலீஸார், மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை நேற்று ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.  அவர்களது விசாரணையில் சகாயராணி விக்டோரியா கூறுகையில்,  "பால மணிகண்டன் வகுப்பில் எனது மகளுக்குப் போட்டியாக இருந்தார்.  ஆண்டு விழாவில் மகளுக்கு ஒரு பரிசுக்கூட கிடைக்காதது குறித்து என் மகள் மனசு உடைந்து தெரிவித்தாள். தனக்கு பெரிய அசிங்கமாக உள்ளது என்று அவள் அழுதாள்.  இதனால் மாணவரை கொல்ல முயற்சி செய்து, காமராஜர் சாலையில் உள்ள ஒரு  கடையில் எலி மருந்து வாங்கிச் சென்றேன். 

இடும்பன்செட்டி சாலையில் உள்ள எனது வீட்டின் கொல்லைப்புறத்தில் வைத்து, 2 குளிர்பான பாட்டிலில் கலந்து எடுத்துச்சென்று, பள்ளி வாட்மேனிடம் பாலமணிகண்டனின் அம்மா கொடுத்ததாக கொடுத்து விடுங்கள் எனக்கூறி விட்டுச் சென்றுவிட்டேன்"  என்று சகாயராணி விக்டோரியா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீஸார், விக்டோரியாவை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று குளிர்பானத்தில்  எலி மருந்து கலந்தது எப்படி என்று செய்து காண்பிக்க வைத்து அதனை  வீடியோ பதிவு செய்தனர். உரிய  விசாரணைக்கு பிறகு விக்டோரியாவை மீண்டும்  புதுச்சேரிக்கு கொண்டுச் சென்று சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in