ரவுடி சஞ்சய் ராஜாவை முடக்கியது அடுத்த நடவடிக்கை!

ரவுடி சஞ்சய் ராஜா
ரவுடி சஞ்சய் ராஜா

கோவையில் போலீஸை சுட முயன்ற ரவுடி சஞ்சய்ராஜா மீது கொலை முயற்சி உட்பட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தி பாண்டி (32). பிரபல ரவுடியான இவர் கடந்த மாதம் 12ம் தேதி இரவு கோவை பாப்பநாயக்கன் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கோவையை சேர்ந்த சஞ்சய்குமார் (23), காஜா உசேன் (23), ஆல்வின் (37), சல்பர்கான் (22) ஆகியோர் அரக்கோணம் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் இவர்களது கூட்டாளியான இருசக்கர வாகன மெக்கானிக் மணிகண்டன் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சரவணம்பட்டியை சேர்ந்த சஞ்சய் ராஜா(31) என்பவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்தார். 

இவரை கோவை அழைத்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் கடந்த 3ம் தேதி முதல் 5 நாட்கள் கட்டுப்பாட்டில்  எடுத்து ரகசிய இடத்தில் விசாரித்து வந்தனர். அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு துப்பாக்கியை சரவணம்பட்டி கரட்டு மேடு முருகன் கோயில் அருகே அவர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண லீலா தலைமையிலான போலீஸார் நேற்று சஞ்சய் ராஜாவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு மலை பகுதியில் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்த சஞ்சய்ராஜா, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா மீது இரண்டு ரவுண்டு சுட்டார். அவர் மரத்தின் பின்னால் மறைந்து தப்பினார். 

அதையடுத்து  தற்காப்பு நடவடிக்கையாக சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் துப்பாக்கியால் சஞ்சய்ராஜாவின் காலில் சுட்டார். காயமடைந்த சஞ்சய்ராஜா போலீஸாரால் கோவை அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சஞ்சய் ராஜா மீது கொலை முயற்சி, ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீஸார்  வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதற்கிடையே அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை. எனவே நேற்று மாலை மருத்துவமனைக்கே சென்று பார்வையிட்ட நீதிபதி, சஞ்சய் ராஜாவின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in