நிதி நெருக்கடியால் `அம்பேத்கர் படிப்புகள்’ தனித்துறை தொடங்க இயலாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

நிதி நெருக்கடியால் `அம்பேத்கர் படிப்புகள்’ தனித்துறை தொடங்க இயலாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் நிதிநிலை நெருக்கடி காரணமாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படிப்புகள் துறையை தற்போதைக்கு தொடங்க இயலாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக நிதிநிலை சீராகும் பட்சத்தில் அடுத்த கல்வியாண்டில் இத்துறையை தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ’அம்பேத்கர் படிப்புகள்’ என்ற பெயரில் தனித்துறையை அமைக்க 2006-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி உள்ளதால் தற்போதைக்கு இந்த புதிய துறையை தொடங்க இயலாது எனவும், நிதி நிலை சீரானதும் இத்துறையை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், நிதிநிலை சீராகும்பட்சத்தில் அடுத்த கல்வியாண்டில் அம்பேத்கர் படிப்புகள் துறையை தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in