தமிழகத்தில் நுழைந்தது பன்றிக் காய்ச்சல்: பாதிக்கப்பட்ட மாணவன், முதியவர் தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் நுழைந்தது பன்றிக் காய்ச்சல்: பாதிக்கப்பட்ட மாணவன், முதியவர் தீவிர கண்காணிப்பு

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவன் ஒருவருக்கும்,  59 வயது நபர் ஒருவருக்கும் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

உலகில் வேகமாக பரவி வந்த பன்றிக் காய்ச்சல்  இந்தியாவில்  பெரிதான வேகம் காட்டவில்லை.  தொற்று பரவல் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லத்தக்க வகையில் இருக்கிறது.  தேசிய அளவில் மிக குறைவான நபர்களுக்கே பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டது.  தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் ஓரிருவருக்கு மட்டுமே பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டன.  அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.

தற்போது தமிழக முழுவதும் விஷக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் அத்தகைய காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.  அப்படி  காய்ச்சல் வந்த கொரடாச்சேரி ஒன்றியத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவனுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இருந்தாலும் அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சிறுவனுடன் வீட்டில் இருந்தவர்கள்,  அவனது பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கும் காய்ச்சல் கண்டறியும்  முகாம் மூலமாக பரிசோதனைகள் செய்யப்பட்டது.

அதேபோல மன்னார்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த 59 வயது பெரியவர் ஒருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் உரிய சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பி வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். அந்த நபர் வசிக்கும்  பகுதியிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  

பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு வர வேண்டும், அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்து மாத்திரைகள் தயாராக உள்ளது,  காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களின் சிகிச்சைக்காக  ஒரு மருத்துவமனைக்கு 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in