`பிள்ளையை படிக்க வைக்க காசு இல்லையே என்கிற கலக்கம் இனி பெற்றோருக்கு இருக்கக் கூடாது'- முதல்வர் ஸ்டாலின்

`பிள்ளையை படிக்க வைக்க காசு இல்லையே என்கிற கலக்கம் இனி பெற்றோருக்கு இருக்கக் கூடாது'- முதல்வர் ஸ்டாலின்

"பிள்ளையை படிக்க வைக்க காசு இல்லையே, அந்த கலக்கம் பெற்றோருக்கு இனி இருக்கக் கூடாது" என்று புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரில் நடந்த புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்ட தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அர்விந்த ஜேக்ரிவால், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கீதா ஜீவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "தமிழக அரசின் முதன்மையான முத்தான திட்டம் இது. இந்த நல்ல நாளில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. அரசு பள்ளிகளிலும் பயிலக்கூடிய மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க கூடிய வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரக்கூடிய அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய மகத்தான திட்டம் இந்த திட்டம். 15 மாதிரிப் பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது எனது வாழ்வில் மகிழ்ச்சிக்குரிய மகத்தான நாள் இன்று. கல்வி என்ற நீரோடை ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர்ந்த சாதி, தாழ்த்தப்பட்ட சாதி, கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த அடிப்படையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு நீதி கட்சி உருவானது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பது இதுதான். உயர் சாதியை சேர்ந்த பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடியும், அதுவும் ஆண்கள் மட்டும் தான் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அத்தகைய காலத்தில் இட ஒதுக்கீட்டை உருவாக்கி பள்ளிகளை உருவாக்கியது நீதி கட்சி தான். அந்த சமூக நீதியை அரசியல் ரீதியாக காப்பாற்றியவர் தந்தை பெரியார். ஆட்சியியல் ரீதியாக காத்தவர்கள் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவருடைய வழித்தடத்தில் நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்திருக்கிறது.

இன்றைய நாள் பல்லாயிரக்ணக்கான பெண்கள் இந்த கல்லூரியில் படிக்கிறீர்கள் என்றால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். பள்ளியில் படித்து வரும் மகளிருக்கு கல்லூரிக்கு வருவதற்கு தடையே தயக்கமாக இருக்கிறது. அந்த தடையை உடைப்பதற்காகத்தான் இந்த புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். பிள்ளையை படிக்க வைக்க காசு இல்லையே, அந்த கலக்கம் பெற்றோருக்கு இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தை எந்த நோக்கத்திற்காக நான் உருவாக்க வேண்டும் என்று சிந்தித்தேனோ அதே நோக்கத்துடன் சிறப்பாக செய்து காட்டியிருக்கிறார் அமைச்சர் கீதா ஜீவன். மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதை அரசு இலவசமாக கருதவில்லை. அதை வழங்குவதை அரசு கடமையாக நினைக்கிறது. பள்ளியுடன் படிப்பை நிறுத்திவிடும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் கல்லூரியில் நுழைகிறார்கள். இதன் மூலமாக தமிழ்நாட்டினுடைய கல்வி வளர்ச்சி அதிகமாகும்.

படித்தவர் எண்ணிக்கை அதிகம் ஆகும். அறிவு திறன் கூடும். திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும்ங. குழந்தை திருமணம் குறையும். பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். ஒவ்வொரு பெண்ணும் சொந்த காலில் இருப்பார்கள். யாருடைய தயவையும் அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். நமது ஆட்சியினுடைய மையக் கருத்து இதுதான்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in